வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக "சிவப்பு "எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காலநிலை மாற்றத்தினால் கடுமையான காற்று அல்லது சூறாவளி அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முன்னர் அதன் பாதிப்புக்கள் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். அதற்கேற்ப பிரதேச மக்கள் முன்னாயத்தமாக தயார்ப்படுத்திக் கொள்வது மிக அவசியமானதாகும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா பிரதேச மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக வீட்டுகளின் கூரைகள், சுவர்கள் என்பன உறுதியுடையனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளல், இல்லையெனின் அவற்றை திருத்துதல், வீட்டினுள் சேதங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தல், கடுங்காற்றின் போது காயங்களை அல்லது உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அகற்றுதல், வெள்ளப்பெருக்கின் போது அருகில் உள்ள உயரமான பகுதிகளுக்குச் செல்வதற்கான வழிகளை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தல், சுவரில் தொங்கவிடப்படிருக்கும் கடிகாரம், புகைப்படங்கள், உயரத்தில் உள்ள அலங்காரப் பொருட்களை அகற்றுதல், தூய தண்ணீரைச் சேமித்து வைத்திருத்தல் (தூக்கிச் செல்லக்கூடிய போத்தல்களில்),அனர்த்த நிலையின் போது சகல விதமான மின்சார தொடர்புகளையும் துண்டித்து விடுதல், உறுதியான பாதுகாப்பான பகுதியில் வாகனங்களை நிறுத்துதல், காற்றின் வேகம் குறையும்போது சூறாவளி நின்றுவிட்டது என எண்ணிவிடாதீர்கள். வேறு திசையில் காற்று வீசக்கூடும். சூறாவளி அபாயம் நீங்கிவிட்டது என வளிமண்டல திணைக்களம் அறிவிக்கும் வரை பாதுகாப்பான இடங்களிலேயே இருக்க வேண்டும் என பிரதேச மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)