சுகாதாரப் பிரிவினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அவர்களது பரிந்துரைகளுக்கு அமைவாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவை பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ நேற்று (07) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அந்தக் குழு ஏற்கனவே தமது ஆராய்வு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான தீர்மானம் சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டல்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டது. மாறாக இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை என்று இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அத்தோடு இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் மத உரிமைகளை உறுதிசெய்வதற்கும் அவர்களது பாரம்பரியங்களுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏதுவான வகையிலேயே தமது அரசாங்கம் செயற்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும் சுகாதாரப்பிரிவினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அவர்களது பரிந்துரைகளுக்கு அமைவாக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.