இந்தியாவிலுள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வணக்கஸ்தலங்களையும் பாதுகாக்குமாறும் சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்கள் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உட்பட ஏனைய சர்வதேச அமைப்புகள் மூலமான கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும் இந்தியாவை பாகிஸ்தான் கோரியுள்ளது.
இந்தியாவின் அயோத்தி நகரிலிருந்து பல நூற்றாண்டுகள் வருட கால பழைமையான பாபர் மசூதி 1992 டிசெம்பர் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் 28 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கையில் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
“இன்று, (டிசெம்பர் 6) இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதை துயரத்தை நினைவூட்டும் நாளாகும். 28 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தில், அயோத்திலிருந்த நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளிவாசலை இந்து வெறியர்களும், ஆர்.எஸ்.எஸினால் தூண்டப்பட்ட பிஜேபியினரும் அரச இயந்திரங்களின் ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை உணர்வுடன் இடித்து, மதங்கள் மற்றும் சர்வதேச நியமங்களை மீறும்; வெறுக்கத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டனர்” என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தீவிர இந்துத்வா ஆட்சியிலிருந்து, இந்தியாவிலுள்ள இஸ்லாமிய பாரம்பரிய தலங்களையும் சிறுபான்மையினரையும் பாதுகாக்குமாறு சர்வதேச சமூகம், ஐ.நா. மற்றும் சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளை பாகிஸ்தான் கோரியுள்ளது.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வலி மிகுந்த காட்சிகள் முஸ்லிம்களின் மனதில் மாத்திரமல்லாமல் உலகிலுள்ள மனசாட்சியுள்ள அனைவரின் மனங்களிலும் உள்ளன எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.