Our Feeds


Saturday, December 5, 2020

www.shortnews.lk

அட்டுலுகம சம்பவத்தின் பின்னாலுள்ள அதிர்ச்சிகள் - ஊடகங்களின் போலி முகம்

 


 

(அப்ரா அன்ஸார்)

அட்டுலுகம பிரதேச முஸ்லிம்கள் கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தலங்களிலும் அட்டுலுகம குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.

பண்டாரகம அட்டுலுகம பிரதேசம் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மில்லெனிய பகுதியில் தொழிற் சாலையொன்றில் பணியாற்றும் இருவரிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அங்கு தொடராக மேற்கொள்ளப்பட பி.சி. ஆர். பரிசோதனைகளில் இதுவரை 300 க்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் ஏற்பட்ட ஆரம்பத்தில், பிரதேச மக்கள் சுகாதாரத் துறையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வந்துள்ளனர். ஆனால் பல நாட்கள் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல் வீடுகளில் வைக்கப்பட்டமையால் நோய் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

அத்துடன் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளும் ஒரு வாரமளவில் தாமதித்தே வழங்கப்பட்டுள்ளது. இதனால் தாம் நோய்த் தொற்றுக் குள்ளாகியுள்ளமை தெரியாமல் மக்கள் ஊரில் நடமாடியதால், கொரோனா தொற்று பரவல் வீதம் அதிகரித்துள்ளதாகத் தெரியவரு கின்றது.

இந்நிலையில், பிரதேச இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளதோடு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவரை 12 நாட்களின் பின்னர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, குறித்த நபர் சுகாதார தரப்பை தாக்க முற்பட்டுள்ளார்.

அட்டுலுகம தனிமைப்படுத்தப் படுவதற்கு முன்னர் தையிபா மண்டபத்தில் சுகாதார அதிகாரிகளினால் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப் பட்டு, பிரதேச முஸ்லிம்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக் கைகளுக்கு ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் போலி முகவரிகள் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த மூவரையும் பிரதேச மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர். எனினும், எந்த முன்னறிவிப்பும் இன்றி தாம் முடக்கப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த எல்லா நிலமைகளினதும் பாரதூரத்தை உணர்ந்த  அட்டுலுகம கொவிட் தடுப்பு முகாமை நிலையம், உடனடியாக அரச வைத்திய சங்கத்தை தொடர்புகொண்டு நிலமையை விளக்கி, மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதனடிப்படையில், செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளப்பட்ட 470 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த 96 பேரும் ஹம்பாந்தோட்டையில் சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் இருவரை பரிசோதனைகளைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படாமை குறித்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டபோது, சுகாதார தரப்பினர் முறையாக நடவடிக்கை எடுக்கா ததே இன்றைய அவல நிலைக்குக் காரணமென்றும், தாம் முஸ்லிம்கள் என்பதால் சகல தரப்பினரது விமர்சனங்களுக்கும் உள்ளாகுவதாக வும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுமார் 20 ஆயிரம் பேரளவில் அடர்த்தியாக வாழும் அட்டுலுகம பிரதேசத்தில் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் அவதானம் ஏற்பட்டுள்ளது. பிரதேசம் இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா மரணங்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தும் நடைமுறையால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சில ஊடங்களின் இனவாத பிரச்சார நடவடிக்கைகளால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »