(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் என அறியப்படும் ஏப்ரல் 21 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை பகுதியில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வன்முறைகளுடன், பிவித்துரு ஹெல உருமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்தவுக்கு தொடர்புகள் இருந்தமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டது.
குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த விசாரணை அதிகாரிகள் இது தொடர்பில் சாட்சியங்கள் ஊடாக விடயங்களை வெளிப்படுத்தினர்.
நேற்று முன்தினம் , நவம்பர் 30 ஆம் திகதி, ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.
ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இந்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர், மே மாதம் 13 ஆம் திகதி நானும் , அப்போது மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனும், திஹாரி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற சர்வ மத கலந்துரையாடல் ஒன்றுக்கு சென்றிருந்தோம்.
அப்போதுதான் மினுவாங்கொடை பகுதியில் பல வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாம் மினுவாங்கொடை பகுதி நோக்கி சென்றோம்.
மினுவாங்கொடையை அடையும் போதும், மினுவாங்கொடை பெளஸ் ஹோட்டல் மற்றும் கல்லொலுவ சந்தியில் உள்ள இரு வீடுகள் மீது, மோட்டாச் சைக்கிள்களில் வந்த முகத்தை முழுமையாக மறைத்திருந்த குழுவினர் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மினுவாங்கொடை நகரில் 500 முதல் 2000 பேர் வரை மினுவாங்கொடை நகரில் கூடி வன்முறைகளை தூண்டும் வன்னம் நடந்துகொண்டனர்.
போதுமான அளவு படையினர் இல்லாமையால் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதன்போது, மினுவாங்கொடை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உட்பட 24 வர்த்தக நிலையங்கலை அவர்கள் உடைத்து தீ வைத்து அழித்திருந்தனர்.
அப்பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்கும் தீ வைத்திருந்தனர். மினுவாங்கொடை பெளஸ் ஹோட்டலுக்கு முகத்தை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தோர் சேதம் விளைவித்து தீ வைத்திருந்த நிலையிலும், ஒன்று கூடியவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கியிருந்தமையும் அடிப்படையாகக் கொண்டு இது ஒரு திட்டமிட்ட செயல் என்பது குறித்த சந்தேகம் ஏற்பட்டது என குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், இந்த வன்முறைகளுக்கு 5 நாட்களுக்கு முன்னர் அப்பகுதி விகாரை ஒன்றில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. அதற்கும் மதுமாதவ அரவிந்த சென்றுள்ளார் என்பது பின்னர் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.' என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அந்தன தீப்த லியனகே சாட்சியமளித்தார்.
இதன்போது, இந்த தீ வைப்பு, தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின் பின்னணியில் ஏதேனும் அரசியல் கட்சிக்கு அல்லது அமைப்பொன்றுக்கு தொடர்புகள் உள்ளதாகவோ அல்லது அவர்களால் இது நெறிப்படுத்தப்பட்டதாகவோ விசாரணைகளில் தெரியவந்ததா என அரசின் சிரேஷ்ட சட்டவாதி சுஹர்ஷி ஹேரத் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன தீப்த லியனகே,
' 2019 மே 13 ஆம் திகதி இந்த வன்முறைகள் இடம்பெற முன்னர், வேகொவ்வ, கல்லொலுவ பகுதியில் ஸ்ரீ சுபத்ரா ராம விகாரையில் ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. விகாரையின் சிறிய பிக்கு ஒருவரை முஸ்லிம் இனத்தவர் ஒருவர் தாக்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
அந்த சம்பவத்தை மையப்படுத்தி அப்பிரதேசத்தவர்கள் ஒன்று கூடி அந்த விகாரையில் கலந்துரையடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர். அந்த கலந்துரையாடலை ஜகத் எனும் நபரே ஏற்பாடு செய்துள்ளார்.
ஜகத் என்பவர், மதுமாதவ அரவிந்த எனும் பிவித்துரு ஹெல உறுமய கட்சி உறுப்பினரின் சகா. இதன்போது அந்த கூட்டத்துக்கு வந்துள்ள மதுமாதவ அரவிந்த ' இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக , கிளர்ந்தெழ வேண்டும் ' என கூறியுள்ளார்.
அதிலிருந்து ஒரு வாரத்துக்கு பின்னரேயே மினுவாங்கொடை நகரில் குறித்த வன்முறைகள் இடம்,பெற ஆரம்பித்துள்ளன. வன்முறைகள் இடம்பெற்ற போது மதுமாதவ அரவிந்த மினுவாங்கொடை பகுதியில் இருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. பின்னர், முஸ்லிம் இனத்தவர் ஒருவர் சிறிய பிக்கு ஒருவரை ( பயில் நிலை பிக்கு) தாக்கியதாக கூறப்பட்ட விடயம் கட்டுக் கதை என்பதும் விசாரணைகளில் உறுதியானது.' என்றார்.
இதனைவிட, இந்த வன்முறைகள் இடம்பெற்ற நாளில், மதுமாதவ அரவிந்தவுக்கும், இந்த வன்முறைகளின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் ஜகத்துக்கும் இடையில் இரு தொலைபேசி அழைப்புக்கள் பரிமாற்றப்பட்டுள்ளமை, தொலைபேசி விபரங்களை ஆராயும் போது தெரியவந்தது. என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன தீப்த லியனகே குறிப்பிட்டார்.
இதனையடுத்து மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.ஆர்.ஏ. பிரியந்த ஆணைக் குழுவில் சாட்சியமளித்தார்.
' தன்னை முஸ்லிம் இனத்தவர் ஒருவர் தாக்கியதாக பயில் நிலை பிக்கு தெரிவித்தமை பொய்யான விடயம் என்பதும், ஜகத் என்பவரின் கோரிக்கையில் அவர் அவ்வாறு பொய்யுரைத்துள்ளதும் பின்னர் விசாரணைகளில் தெரியவந்தது.
குரித்த பயில் நிலை பிக்குவின் முறைப்பாடு தொடர்பில் நான் விசாரணை முன்னெடுக்க அந்த விகாரைக்கு சென்ற போதும், அங்கு மதுமாதவ அரவிந்த இருந்ததை கண்டேன்.
இதன்போது மதுமாதவ அரவிந்த எனது தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் பயில் நிலை பிக்குவுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் தேடிப் பார்க்குமாறும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
வன்முறைகள் பதிவான நாளுக்கு அண்மித்த நாட்களில் மினுவங்கொடை பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் விஷேடமாக மதுமாதவ அரவிந்த கவனம் செலுத்தியிருந்தமையை விசாரணைகளில் கண்டறிய முடிந்தது.
அத்துடன் வன்முறைகலின் போது தீ வைக்கப்பட்ட கடைத் தொகுதி பக்கமாக மதுமாதவ அரவிந்த நடமாடியமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மதுமாதவ அரவிந்த மற்றும் அவருடன் வருகை தந்திருந்த இருவர், ஜகத், நுவன் அகைய சந்தேக நபர்களைக் கைது செய்ய முயன்ற போது, அவர்கள் கைது செய்வதை தடுக்கும் உத்தரவொன்றினை பிரப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றினை நாடியிருந்தனர்.' என சாட்சியமளித்தார்.
இதனிடையே, மினுவாங்கொடை வன்முறைகளின் போது தீ வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள், மினுவாங்கொடை நகர சபைக்கு சொந்தமானவை எனவும் அவை குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த போதும், அந்த வர்த்தக நிலையங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளமையும் ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.
குறித்த அனைத்து வர்த்தக நிலையங்களையும் அகற்றுவதற்கான உத்தரவு மினுவாங்கொடை நகர சபை தலைவர் நீல் ஜயசேகர ஊடாக வன்முறைகளுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்தது.
இது தொடர்பில் அவ்வந்த வர்த்தக நிலையங்களை நடாத்திச் சென்றவர்கள் பல்வேறு சந்தர்பங்களில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில், தங்கலை நகர சபை தலைவர் எதேச்சதிகாரமாக வர்த்தக நிலையங்களை விட்டு வெளியேறுமாரு உத்தரவிட்டுள்ளதாக கூறி முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த தனத சாட்சியத்தில் கூறினார்.
இதனிடையே, மினுவாங்கொடை நகர சபைக்கு சொந்தமான நீர் பவ்சர் வண்டியை, வர்த்தக நிலையங்களில் பரவிய தீயை கட்டுப்படுத்த பயன்படுத்துவதற்கு கூட முடியாமல் போனதாகவும், சாரதி சேவையில் இருக்காமை அதற்கான காரணமாக கூறப்பட்டதாகவும் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார். வன்முறை இடம்பெற்ற நாள் திங்கட் கிழமையாக இருப்பினும், அந்த பவ்சர் வண்டியின் சாரதி அல்லது பொறுப்புவாய்ந்த அதிகாரி , குறித்த விடயத்தை தெளிவுபடுத்த நகர சபையில் இருக்கவில்லை. எனவும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.