கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் மேலும் 6 பேருக்கு இன்று (07) திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று பொதுச் சந்தையுடன் தொடர்புபட்டு, சாய்ந்தமருதில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதன்படி சாய்ந்தமருதில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் முதலாவது அலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சாய்ந்தமருதை சேர்ந்த முதலாவது கொரோனா தொற்றாளர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். ஏனையவர்கள் இன்னும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய மற்றும் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
அதேவேளை கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த முதலாவது கொரோனா தொற்றாளர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அரச ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.