Our Feeds


Wednesday, December 2, 2020

www.shortnews.lk

இலங்கைக்குள் பிரவேசித்தது புரெவி புயல் - காற்று 80 - 100 KM வேகத்தில் வீச வாய்ப்பு

 



வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கரையை கடந்து இலங்கையினுள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


புரெவி புயலின் மையப்பகுதி திருக்கோணமலை மற்றும் முல்லைத்தீவிற்கு இடையில் கரையை கடந்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புயல் நகரும் தடத்தில், மணிக்கு 80 முதல் 90 மைல் வேகத்தில் காற்று வீசும். அது மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். புரெவி புயல் மேற்குத் திசையில் நகர்ந்து நாளைக் காலை அளவில் மன்னார் குடாவை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் காரணமாக, திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலும் கரையோரப் பிரதேசங்களில் ஒரு மீற்றர் வரையிலான அலைகள் தோன்றி, கடல்நீர் நிலத்திற்குள் வரக்கூடும் என திணைக்களத்தின் சிவப்பு அறிவித்தலில் எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியின் காரணமாக, நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து, கடல் மிகவும் கொந்தளிப்பானதாக மாறலாம்.

நாட்டின் உட்பிரதேசங்களைப் பொறுத்தவரையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு வடமேல், மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசலாம். வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லி மீற்றரைத் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறும் கேட்கப்படுகிறார்கள். முறிந்து விழக்கூடிய மரங்கள், மின்கம்பங்கள் பற்றி அவதானம் தேவை. இடிமின்னல் தாக்கம் ஏற்படுகையில், கம்பிவழி தொலைபேசிகள், இலத்திரனியல சாதனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் தத்தமது பிரதேசங்களைச் சேர்ந்த இடர்காப்பு முகாமைத்துவ நிலைய அதிகாரிகளைத் தொர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »