கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் நுரையீரலில் அசாதாரண செயல்பாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சாதாரண ஸ்கேனிங் முறைகளால் கண்டறியப்பட முடியாத பாதிப்பை அறிவதற்காக புதிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை கொண்டு 10 நோயாளிடம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இதுகுறித்து தெரியவந்துள்ளது.
இந்த புதிய முறையில், எம்.ஆர்.ஐ ஸ்கேன்களின் போது செனான் எனப்படும் வாயுவைப் பயன்படுத்தி நுரையீரல் சேதம் குறித்து கண்டறியப்படுகிறது. இந்த செயல்முறையின்போது நோயாளிகள் செனான் வாயுவை உள்ளிழுக்கின்றனர்.
நுரையீரலில் ஏற்படக்கூடிய நீண்டகால சேதத்தை கண்டறியக்கூடிய இந்த சோதனை கோவிட் நோயாளிகளுக்கு நிவாரணமளிக்கும் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வுக்கு தலைமை வகிக்கும் பேராசிரியர் ஃபெர்கஸ் க்ளீசன், இந்த புதிய ஸ்கேனிங் முறையை 19 மற்றும் 69 வயதுக்கு உட்பட்ட 10 நோயாளிகளிடம் பரிசோதனை செய்துள்ளார்.
ஆய்வில் பங்கேற்ற பத்தில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸால் நோய்வாய்ப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு காணப்பட்டது. அவர்களில் யாருக்கும் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என்றாலும், வழக்கமான ஸ்கேன்களில் அவர்களின் நுரையீரலில் எந்தப் பிரச்சனையும் கண்டறியப்பட முடியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சனைகளை கொண்ட எட்டு பேரையும் இந்த ஆய்வில் பங்கேற்ற செய்ததன் மூலம், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது ஸ்கேன் மூலம் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து கோவிட்-19 நோய்ப் பாதிப்புக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத, தீவிர பிரச்சனையை சந்திக்காத 100 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தி இந்த முடிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய பேராசிரியர் க்ளீசன் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பேராசிரியர் ஃபெர்கஸ் க்ளீசன், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு பிறகு நுரையீரல் பாதிப்பு நிகழ்கிறதா, அப்படி நிகழ்ந்தால் அது காலப்போக்கில் தானாக சரியாகிவிடுமா அல்லது நிரந்தரமான பிரச்சனையா என்பதை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம் என்று கூறுகிறார்.
"கொரோனா பாதிப்பால் நுரையீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்று கருதினேன். ஆனால், முதல்கட்ட ஆய்வில் தெரியவந்த அளவுக்கு அது தீவிரமானதாக இருக்குமென்று கருதவில்லை."
கடுமையான நோய்ப் பாதிப்பு மற்றும் இறப்பு நேரிடும் ஆபத்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், பேராசிரியர் க்ளீசன் கருத்துப்படி, நுரையீரல் பாதிப்பு மற்ற வயதினரிடையேயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர்களிடமிருந்தும் கூட காணப்படுவது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், அது தற்போதைய கொரோனா பாதிப்பு குறித்த புரிதல்களை மாற்றக்கூடும்.
எனினும், செனான் வாயுவை கொண்டு செய்யப்பட்ட ஸ்கேனிங் முறையின் வாயிலாக கண்டறியப்பட்ட நுரையீரல் பாதிப்புக்கும் நீண்டகால கோவிட் பாதிப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் அவர் சந்தேகிக்கிறார்.
இந்த ஸ்கேனிங் நுட்பத்தை உருவாக்கிய ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானியான பேராசிரியர் ஜேம்ஸ் வைல்ட், இது கோவிட்-19 நோய்த்தொற்று சார்ந்த நுரையீரல் பாதிப்பை கண்டறியும் "தனித்துவமான" வழியை வழங்குவதாகக் கூறுகிறார்.
இந்த நிலையில், இதுதொடர்பான பரந்துபட்ட ஆய்வை மேற்கொள்ள உதவி வரும் மருத்துவர் ஷெல்லி ஹேல்ஸ், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 10 சதவீதத்தினருக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்று கூறுகிறார்.
"நோயாளிகளிடம் அவர்களுக்கு எந்த பிரச்சனை என்று தெரியவில்லை என்று மருத்துவப் பணியாளர்கள் கூறுவதும், நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியாததும் மிகவும் அழுத்தம் அளிக்கக் கூடியது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
புதிய பரிசோதனை முறை வேண்டும்.
கொரோனாவின் தீவிர அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனது 60ஆவது பிறந்தநாளை கழித்த டிம் கிளேடன் ஒரு கட்டத்தில் தான் உயிரிழக்கப் போவதாக எண்ணியபோது இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டு செனான் வாயுவை கொண்டு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது குறித்து தெரியவந்தது. அதற்கு முன்புவரை, தான் ஏன் முழுமையாக குணமடைய முடியவில்லை என்பதை எண்ணி விரக்தியடைந்த நிலையில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
"இந்த பரிசோதனையின் மூலம், எனது நுரையீரலில் ஏதோ பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. ஆனால், மற்றவர்களை போன்று இது நிரந்தர பிரச்சனையா அல்லது தற்காலிக சிக்கலா என்ற கேள்வி எனக்குள்ளும் இன்னும் நீடிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பிரிட்டிஷ் நுரையீரல் அமைப்பை சேர்ந்த மருத்துவர் சமந்தா வால்க்கர், "இதொரு முக்கியமான ஆய்வு. அடுத்தடுத்த கட்டங்களிலும் இது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், கோவிட்டுக்கு பிந்தைய நுரையீரல் பாதிப்பை அறிய தகுந்த பரிசோதனை முறையை ஏற்படுத்துவது அத்தியாவசியமானது. இதை அடிப்படையாக கொண்டே இதற்குரிய சிகிச்சை முறைகளையும் உருவாக்க முடியும்" என்று கூறினார்.
BBC