மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை வைத்திருந்த கட்டிடத்தை உடைத்து சில மருந்துகளை கைதிகள் அருந்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் பல்வேறு சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் 2,750 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1600 கைதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு உண்ணும் இடத்தில் ஒன்றுகூடிய குறித்த 1600 கைதிகளும் கதவுகளை உடைத்து வௌியில் வந்து தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது சிறைச்சாலை அதிகாரி மற்றும் மேலும் சில அதிகாரிகள் கலந்துரையாட சென்றுள்ள போதிலும் கைதிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் கற்களை வீசி எறிந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகளுக்கு அறிவுறுத்தி போதிலும் அவர்கள் அடங்காத காரணத்தினால் ரபர் குண்டுகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்த அவர் இதனையடுத்து சிறைச்சாலையில் மருந்துகள் வைத்திருந்த கட்டிடத்தில் இருந்த மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் மேலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையின் பல சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருந்துகள் வைத்திந்த கட்டிடத்தில் மன அழுத்தம் மற்றும் தூக்க மருந்துகள் 21,000 இருந்ததாகவும் அவற்றை கைதிகள் அருந்தியுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் பித்து பிடித்தவர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மருந்துகள் எந்த காரணத்திற்காக எடுத்துவரப்பட்டன என்பன தொடர்பில் விசாரணைகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.