Our Feeds


Friday, December 4, 2020

www.shortnews.lk

2013 முதல் 2016 வரை இலங்கைக்கு 6130 மில்லியன் ரூபா இழப்பு - பாராளுமன்ற கணக்குகள் குழுவில் வெளிவந்த தகவல்

 



இரண்டு முன்னணி பாம் எண்ணெய் நிறுவனங்கள் காரணமாக 2013-2016 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு 6130 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பது பாராளுமன்ற கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.


இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குறித்த காலப் பகுதியில் பிழையற்ற இணக்கமான பொருள் விளக்கக் குறியீட்டினை (HS Code) வழங்காமையால் இந்தத் தொகை இழக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணைகளில் புலப்பட்டது.

இந்த மூன்று வருடங்களில் குறித்த நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இலங்கை சுங்கத் திணைக்களமும் இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைத்தது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிபிரிய இதற்கு இணக்கம் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு முதல் இறக்குமதியாளர்களால் விசேட தேவைக்கான வாகனங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அவை இரட்டைத் தேவையுடைய வாகனங்களாகப் பதிவுசெய்யப்பட்டமையால் வரியாகப் பெறப்படவேண்டிய 220 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு இழக்கப்பட்டுள்ளமையும் இங்கு வெளியானது. 2010-2019 வரையான காலப் பகுதியில் 443 விசேட தேவைக்கான வான்களுக்காக தலா 3 மில்லியன் ரூபா வீதம் ஆகக் குறைந்தது 1300 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வசூலித்திருக்க முடியும் எனவும் இங்கு புலப்பட்டது.

அத்துடன், மோட்டார் லொறி மற்றும் வான் போன்றவை விசேட தேவைக்கான வாகனங்கள் எனக் கூறி இறக்குமதி செய்யும் செயற்பாட்டின் கீழ் 2010ஆம் ஆண்டு முதல் 10 வான்களும், 414 லொறிகளும் இறக்குமதி செய்யப்பட்டமையால் பாரிய சுங்க வரி முறைகேடு இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வு சுட்டிக்காட்டியுள்ளமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம், ஏறத்தாழ ஒன்பது மில்லியன் ரூபா பெறுமதியான அதிசொகுசு மோட்டார் வாகனம் விசேட தேவைக்கான வாகனங்கள் பிரிவின் கீழ் 1.5 மில்லியன் ரூபாவை மாத்திரம் அறவிடப்பட்டு சுங்கத் திணைக்களத்தினால் வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

அந்த வாகனம் உரிய வாகனப் பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்துக்கு 56 மில்லியன் ரூபா சுங்கவரி அறிவிடப்பட்டிருக்கும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகலவின் இணக்கப்பாட்டுடன், சுங்க, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு இடையில் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் தானியங்கி கணினி ஒப்பீட்டு பொறிமுறையொன்றை நடத்துவதற்கு கோபா குழு முன்னர் வழங்கிய பரிந்துரையை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »