Our Feeds


Monday, December 7, 2020

www.shortnews.lk

04/21 தாக்குதலுக்கு முன் ஸஹ்ரானிடம் சத்தியப் பிரமாணம் செய்யும் மோதிரம் அணிந்த வெள்ளை நிற கையுடைய பெண் யார்?

 



உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான சதித் திட்டம் இலங்கையில் தீட்டப்பட்டதல்ல எனவும், இந்தத் தாக்குதல்களின் பின்னால் உள்ளவர்கள் உலகில் பண பலம் படைத்த, வெளிநாடுகளில் படித்த, ஐஎஸ் உடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் எனவும் அந்த வலையமைப்பை கண்டறிய முடியாமல் போயுள்ளதாகவும் பதுகாப்பு படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி அட்மிரால் ரவீந்ர விஜே குணரத்ன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், பதுகாப்பு படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி அட்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் நெறிப்படுத்தலில் நேற்று முன்தினம் சாட்சியமளித்தார். இதன்போது, ஆணைக்குழுவின் உறுப்பினர் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன ‘ எந்தத் தகவலும் எமது உளவுப் பிரிவினருக்கு கிடைக்காமல் இத்தகைய தாக்குதல் ஒன்று இடம்பெற சாத்தியம் உள்ளதா?’ என எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த  பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி அட்மிரால் ரவீந்ர விஜே குணரத்ன.

‘இது இலங்கையில் திட்டமிடப்பட்டதல்ல. ஸஹ்ரான் கூட நாங்கள் நினைக்கும் பயங்கரவாதி அல்ல.

நாம் தேடுபவர்கள் உலகில் பண பலம் படைத்த, வெளிநாடுகளில் படித்த, ஆங்கிலம் பேச முடியுமான ஐஎஸ். அமைப்புடன் தொடர்புகளைப் பேணும் அறிவுடையவர்கள். அவர்களே இதன் பின்னணியில் உள்ளார்கள். அந்த வலையமைப்பைக் கண்டுபிடிக்க எம்மால் முடியாமல் போயுள்ளது. தாக்குதல்களின் பிரதானியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

எந்தவொரு பயங்கரவாத அமைப்பினதும் தலைவரும் தற்கொலைத் தாக்குதலில் நேரடியாக பங்கேற்க மாட்டார். குறைந்தபட்சம் இந்த தாக்குதல்களின் பின்னணியில் இருந்து அதனை வழி நடத்திய ‘ ஹென்டலர்’ ஆக செயற்பட்டவரைக் கூட எம்மால் கண்டுபிடிக்க இதுவரை முடியவில்லை. (நான் ஓய்வெபெறும்போது இருந்த விடயங்களை வைத்து இதனை கூறுகின்றேன்.) இதற்கு ஐ.எஸ் உதவியுள்ளதாக தோன்றுகிறது.

தாக்குதல்களுக்கு முன்னர் ஐஎஸ் இற்காக தாக்குதல்தாரிகள் வழங்கும் சத்தியப் பிரமாண வீடியோவை நன்றாக உற்று நோக்குங்கள். அதில் பெண் ஒருவரின் கையை அவதானிக்க முடியும்.

வெள்ளை நிறக் கைகளில் ஒன்றில் மோதிரம் அணிந்து ஒருவர் காணப்படுவதனை அவதானிக்க முடியும். யார் அந்த பெண்? அவர் சத்தியப் பிரமாணம் செய்யும் குழுவிலிருந்து சிறிது தள்ளி நின்று கையை உயர்த்துவதை அவதானிக்க முடிகிறது. என்னைப் பொறுத்தவரை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் முழுமையான நெறிப்படுத்தலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனைவிட, ஆணைக்குழுவில் அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது,

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே வெளிநாட்டிலிருந்து தகவல்கள் கிடைத்திருந்தன. அந்தத் தகவலை அப்போதைய அரச உளவுச் சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன எம்முடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளவில்லை.

உளவுத்துறையை பொறுத்தவரை, ஒரு தகவலால் யாருக்கு நற்பெயர் கிடைக்கும் என எண்ணி வேலை செய்யும் இடமல்ல. 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி கிடைத்ததாக கூறப்படும் அந்தத் தகவலை எம்முடன் பகிர்ந்திருந்தால், அதன் பின்னர் அதாவது ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்ஜே மித்ரா, அப்போதைய இந்திய பதில் பாதுகாப்பு படைகளின் அதிகாரி ஆகியோருடன் பேசி மேலதிக தகவல்களைப் பெற்றிருக்கலாம்.

எனினும் ஏப்ரல் 8 ஆம் திகதி இந்து – லங்கா பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவர்களிடம் பேசுமளவுக்கு கூட எமக்கு அந்த தகவல்களை நிலந்த ஜயவர்தன வழங்கியிருக்கவில்லை. அத்துடன் தாக்குதல் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்திருந்தால், அந்த மாநாட்டுக்கு வந்திருப்பார்களா என்பதும் ஆராயப்பட வேண்டியதே.

எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தப்படப்போவதாக கிடைத்த தகவல் இந்தியாவிலிருந்துதான் கிடைத்தது என மூலத்தை வெளிப்படுத்தியது, நிலந்த ஜயவர்தன செய்த மிகப் பெரும் தவறாகும். பொதுவாக அவ்வாறு நாம் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படுத்த மாட்டோம்.

அதனாலோ என்னவோ, தாக்குதலின் பின்னர் இந்த வலையமைப்பு தொடர்பில் எந்தத் தகவலும் வெளிநாட்டு உளவுத் துறைகளிடமிருந்து எமக்கு கிடைக்கவில்லை.’ என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »