(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரிகளில் உயிராேடு இருக்கும் சாராவை இந்தியாவில் இருந்து அழைத்துவர அரசாங்கம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. அத்துடன் ஏப்ரல் தாக்குதலை காரணம் காட்டி ஆட்சிக்குவந்த அரசாங்கத்துக்கு இதுவரை குற்றவாளிகளை கைதுசெய்ய முடியாமல்போயுள்ளது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்திருக்கின்றது. அண்மையில் விசாரணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்த குற்றப்புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் இருக்கின்றார். அது யார் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தபோதும் தனது பதவி காலம் முடிவடைந்ததால் முடியாமல்போனதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர் யார் என்பது புலனாய்வு பிரிவு உட்பட அரசாங்கத்தில் அதிகமானவர்களுக்கு தெரியும். ஆனால் ஒருவருடமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடித்து இதுவரை யாரையும் கைதுசெய்யவில்லை.
அதேபோன்று கடந்த காலங்களில் எமது அரசாங்கத்தில் இருந்த பல அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தினார்கள். ஆனால் எதனையும் ஒப்புவிக்கவில்லை. அதேபோன்று இந்த தாக்குதலால் முஸ்லிம் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அதனால் விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதன் மூலமே முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரிகளில் உயிராேடு இருப்பது சாரா என்ற பெண் மாத்திரமாகும். அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றது உறுதியாகி இருக்கின்றது. உண்மையாகவே விசாரணை நடத்துவதாக இருந்தால் சாராவை இந்தியாவில் இருந்து அழைத்துவர நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
கடந்த வாரம் இந்தியாவின் பாதுகாப்பு ஆலாேசகர் நாட்டுக்கு வந்திருந்தார். ஜனாதிபதியையும் சந்தித்து பேசினார். அப்போதாவது ஏன் சாராவை கொண்டுவர கேட்கவில்லை.
அதனால் இந்த தாக்குதலில் பாரிய சதித்திட்டம் இருக்கின்றது. சஹ்ரானுக்கு மாத்திரம் இதனை செய்ய முடியாது. சஹ்ரான் யாருடைய தேவைக்கு இவ்வாறு செயற்பட்டார்?. இதற்கு பின்னால் பாரிய சக்தி ஒன்று இருக்கவேண்டும். யார் அந்த சக்தி என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்றார்.