Our Feeds


Sunday, November 15, 2020

www.shortnews.lk

ரிஸ்வி முப்தி சாம்பளை எப்படி அடக்குவது என வழிகாட்டுகிறார் - சமூகமோ கதைகளை கேட்க்க தயாராக இல்லை - Dr அமீர் அலி சாடல்

 



உலகத்திலுள்ள எந்தவொரு விஞ்ஞானியோ அன்றி தொற்றுநோயியலாளரோ, கொறோனாவால் மரணமடைந்த சடலத்திலிருந்து கொறோனா வைரஸ் பரவும் என்பதற்கு இது வரை உறுதியான சான்றுகள் எதனையும் முன்வைக்கவில்லை. இலங்கையிலுள்ள அரசாங்கத்தின் கீழியங்கும் சுகாதார நிபுணர்களின் குழு என்ற ஒன்றே, இங்கு தரைக்கீழ் நீர் மட்டம் உயர்வாக இருப்பதால், கொரோனாவால் மரணமடைந்தவர்கள் புதைக்கப்படும் வேளையில் அவ் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது எனும் கருத்தினை முன்வைத்துள்ளனர். அதன் விளைவாக, முஸ்லிம்களது மத உணர்வுகளை நேரடியாக பாதிக்கும் வகையில், பாரபட்சமற்ற வகையில் அத்தகைய சடலங்களை எரித்து விட வேண்டும் என சிபாரிசு செய்துள்ளனர்.


உள்ளுர் முஸ்லிம்களதும், வெளிநாட்டு முஸ்லிம் அமைப்புக்களதும் எதிர்ப்புக்களாலோ, இதற்கு எதிரான உலக சுகாதார ஸ்தாபனத்தினது இதற்கு எதிரான ஆலோசனை மூலமோ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களையோ, அவரது அரசாங்கத்தையோ இது தொடர்பான முடிவினை மாற்றுவதற்கு முடியவில்லை. ஜனாதிபதி அவர்களைப் பொறுத்தவரையில், சுகாதார நிபுணர்கள் குழு அனுமதிக்காத வரை தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றார். இதுவேளூ ஒரே நாடு - ஒரே சட்டம் எனும் மந்திரத்தின் பலமான வெளிப்பாடாக இருக்கமுடியும்.


இந்த வேளையில், நிதி அமைச்சுக்குப் பொறுப்பான முஸ்லிம் அமைச்சரோ தனது சமூகத்துக்கு இழைக்கப்படும் இந்த அநீதியைக் கண்டுகொள்ளாதவராகவே உள்ளார். மேலும், முப்தி அவர்கள் முஸ்லிம்களின் பிரதான மதத்தலைவரோ தனது சமூகத்துக்கு - எரியூட்டிதன் பின்னர் - சாம்பலை எவ்வாறு புதைப்பது என்பது தொடர்பாக வழிகாட்டுகிறார். இந்த தலைவர்களைப் பொறுத்தவரையில், 'உன்னால் அவர்களை மாற்ற முடியாவிட்டால், அவர்களோடு சேர்ந்து போ' எனும் வழிமுறையைப் பின்பற்றுவதாகவே தோன்றுகிறது. ஆயினும், மறுபுறம் சமூகமோ அவர்களது கதைகளை செவிமடுப்பதற்கு ஆயத்தமாக இல்லை.


இந்த முழு விவகாரமும் அரசியல் சம்பந்தப்பட்டதே தவிர, அறிவியலுக்கும், தொற்றுநோயியலுக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. சுகாதார நிபுணர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட கருத்தானது, 2009 ஆம் ஆண்டு தொடக்கம், குறிப்பாக 2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை பழிவாங்க வழிதேடிக்கொண்டிருக்கும், பௌத்த பேரினவாதிகளுக்கு தேவாமிர்தமாக அமைந்துள்ளது. இத்தகைய பேரினவாதிகளே, கோட்டபாய அரசாங்கத்தின் அச்சாணியாக திகழ்கின்றனர். அவர்களது பௌத்த ஆதிக்கவாத சிறீலங்கா கோட்பாடே, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் கீழுள்ள பதவிநிலை உத்தியோகத்தர்களினதும் தத்துவமாக அமைந்துள்ளது. தற்கால தேசிய சிந்தனையின் சுருக்கமும் இந்த கோட்பாடாகவே காணப்படுகிறது. 


சில நாட்களுக்கு முன்னர், முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விவகாரம் தொடர்பாக அரசாங்கம் மீள் கவனம் செலுத்தவுள்ளது எனும் வதந்தி பரவிய வேளையில், ஒரு வயது முதிர்ந்த, இந்தக் கோட்பாட்டின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான, குணதாச அமரசேகர என்பவர், முஸ்லிம்களது கோரிக்கைகளுக்கு அரசு விட்டுக் கொடுப்பது தொடர்பாக அரசாங்கத்தை எச்சரித்தார். ஓரிரு நாட்களுக்கு முன்பதாக, ஞானசார தேரர் கூட ஒரு நாடு - ஒரே சட்டம் எனும் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்திலுள்ள சட்டவாக்க துறையினருக்கு, தனது வழமையான முஸ்லிம் விரோத தொனியில் ஞாபகமூட்டினார். 


தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் கொரோனாவின் பரவலினை கட்டுப்படுத்த முடியுமாக இருப்பினும், இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் அது மறைந்து விடக்கூடிய எந்தவொரு அறிகுறியும் தோன்றவில்லை. நாட்டின் நிதி நிலைமைகளுக்கு ஏற்ப, இலங்கைக்கு எளிதாகவும், மலிவாகவும் தடுப்புமருந்து கிடைக்கக்கூடிய சாத்தியப்பாடுகளும் நிச்சயமற்றதாகவே உள்ளன. அதிகாரிகள் ஏற்கனவே வர்த்தகத்துக்காக நாட்டை திறந்து விட்டுள்ளனர். ஏனெனில், மக்களது சுகாதாரத்தைக் கவனத்திற்கொண்டு, நாட்டின் வருவாய் குறைந்து விடக்;கூடாது எனும் கருத்தில் பசில் ராஜபக்ஸ உள்ளார். 


இவ்வகையில், அறிவியலுக்கு அப்பாற்பட்ட அடிப்படையைக் கொண்டதும், தேசிய சிந்தனையினால் போஷிக்கப்படுவதுமான முஸ்லிம் சடலங்களை தகனம் செய்யும் செயற்பாடு அவசரநிலையின் கீழ் தொடரவே போகின்றது. மேலும், முப்தி அவர்கள் தனது இணங்கிச் செல்லும் போக்கின் கீழ், இஸ்லாமிய முறையில் சாம்பலை அடக்கம் செய்யும் போதனையினைச் செய்து கொண்டு இருந்தால், அவரால் ஆட்சியாளர்களின் உள்ளங்களை தனதாக்கிக்கொள்ள முடியுமே தவிர சமூகத்தினை அவரால் தனதாக்கிக் கொள்ள முடியாது. 


முஸ்லிம் சடலங்களை தகனம் செய்தல், அவ்வாறே பிரேரிக்கப்பட்டுள்ள பசு மாடுகளை அறுத்தலை தடுத்தல் போன்ற விவகாரங்கள் சித்தாந்த ரீதியாக தூண்டப்பட்டவை. கூடிய விரைவில் முஸ்லிம் தனியார் சட்டங்களும் இந்த சித்தாந்த ரீதியான செயன்முறையின் தாக்கத்துக்கு உட்படக்கூடும். இந்த விடயம் பாராளுமன்றத்துக்கு வருகின்றவேளையில், முஸ்லிம் நீதி அமைச்சர் இதனை எவ்வாறு கையாளப் போகின்றார் என்பதே ஆச்சரியமான விடயம். இதேவேளையில், இச்சித்தாந்தத்தினை ஆதரிப்பவர்கள் சிங்கியாங் மாகாணத்தில், உய்கூர் முஸ்லிம்களுக்கு 'வேட்டை விலங்கு' போல் செயற்படும் நட்பு நாடான சீனா, என்ன செய்கின்றது என்பதனை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பர். 


சீனாவிலிருந்து கசியும் அறிக்கைகளின் பிரகாரம், முஸ்லிம்கள் எவ்வாறு பன்றி இறைச்சியை உண்ணுமாறு பலவந்தப்படுத்தப் படுகின்றனர், முஸ்லிம் பெண்களது தலைமுடி மழிக்கப்பட்டு கைத்தொழில் உற்பத்திகளின் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறியக் கூடியதாக உள்ளது. ஏற்கனவே அபிவிருத்தி எனும் பெயரில், சீன அரசாங்கம் எத்தனையோ பள்ளிவாயில்களையும், மையவாடிகளையும் அழித்து விட்டது. 


ஆயினும், அத்தகைய காட்டுமிராண்டித்தனமான மட்டத்துக்கு இலங்கை செல்லாது என ஒருவரால் கருதமுடியும். ஏனெனில், இலங்கையினால் காலனித்துவ வாதத்துக்கு முன்பிருந்தே, பின்பற்றப்படும், வெற்றிகரமான பல்கலாசார நிர்வாக முறை முழு ஆசியப் பிராந்தியத்துக்கும் எடுத்துக் காட்டானதாகும். 


ஆயினும், இனிமேலும் இடம்பெறக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு முஸ்லிம்கள் முன்பாக உள்ள தேர்வுகள் எவை? அனைத்துக்கும் முதலில், அவர்கள், ஆட்சியிலுள்ள அரசாங்கத்தோடு இணைந்து செல்வதால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, சமாதானமாக கஸ்டங்களை கவலையுடன் தாங்கிக்கொண்டு பிழைத்துக்கொள்ளலாம் எனும் கருத்தினை கைவிட்டு விடுதல் வேண்டும். அதேவேளையில், தற்போதைய எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதன் மூலம் சிறந்த நிலையினை அடைந்து கொள்ளமுடியும் என்பதற்கும் எதுவித உத்தரவாதமும் இல்லை. 


ஏனெனில் அவர்களும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக, தற்கால கேடுமிகு இச்சித்தாந்தத்திற்கு இரையாகக் கூடும். எனவே, முஸ்லிம்களும், அவர்களைப் போல் தமிழ் மக்களும் மூன்றாவது மாற்றுவழியினை தேடுவது அவசியமாகும். அவ்வழி, ஜனநாயகத்தினை அதன் அனைத்து உள்ளார் பண்புகளுடனும் மீளக் கொண்டு வந்து, நாட்டின் பன்மை அரசியலையும், கலாசாரத்தையும் பேணிப்பாதுகாப்பது அவசியமாகும். மகிழ்ச்சிக்குரிய விடயம் யாதெனில், பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலும், பௌத்த மதகுருமார் உள்ளடங்கலாக, இத்தகைய அறிவுபூர்வமான, செல்வாக்கு மிகு புத்திஜீவிகள் குறிப்பிடத்தக்க அளவு காணப்படுவதுடன் இத்தகைய ஜனநாயக நிலை நாட்டுக்கு வருதல் வேண்டும் என அவர்களும் விரும்புகின்றனர். 


முஸ்லிம் புத்திஜீவிகளைப் பொறுத்த வரையில் அத்தகையவர்களை அணுகி, அவர்களோடு கைகோர்த்து, அவர்களை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடன் சேர்ந்து சிறந்ததோர் சிறீலங்காவுக்காக பாடுபடுவது அவசியமாகும். அது விரைவில் நடைபெறப்போகும் ஒரு விடயமல்ல. ஆயினும், எதிர்காலத்தைக் கவனத்திற்கொண்டு அதற்கான அத்திவாரம் இடப்பெறுதல் வேண்டும். நாட்டை சூழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில், தற்போதைய அரசின் மக்கள் செல்வாக்கு குறைவடையக் கூடிய சூழலே காணப்படுகின்றது.


முஸ்லிம் சமூகமானது, தனது சுய இனவாத அரசியலின் விளைவாக, தற்போதைய நெருக்கடியில் சிக்கியுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், அனைத்திலங்கை முஸ்லிம் காங்கிரசும்; உடனடியாக கலைக்கப்படுதல் வேண்டும். முஸ்லிம் சமூகம் பல்லின, தேசப்பற்று மிகு, ஜனநாயக அரசியல் கட்சி ஒன்றின் பங்காளராக மாறவேண்டும். ஆட்சியிலுள்ள அரசானது ஜனநாயகத் தன்மை உடையதாயின், அது அனைத்து சமூகங்களையும், அனைத்து பிரஜைகளையும் சமமாக நடாத்தும். நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். 


எனவே, இந்நிலையில், முஸ்லிம்களோ, தமிழர்களோ, அல்லது சிங்களவர்கள் கூட பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் நாட்டின் அனைத்துப் பிரஜைகளையுமே பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்றனர். எனவே, தற்போது புதிதாகவும், மாற்றாகவும் சிந்திக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »