ஜனாஸா விவகாரத்தை வைத்துக்கொண்டு சில அரசியல்வாதிகள் அரசியல் செய்ய நினைப்பது முஸ்லிம் சகோதரர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயல்!!
- கலாநிதி.வி.ஜனகன்....!
கொரோனா தொற்று எனும் கொடிய நோய் எமது நாட்டையும் காவு கொண்டுள்ள இந்நிலையில் கொரோனா தொற்றினால் பல்வேறு மரணங்கள் இடம் பெற்று வருகின்றதுஆனால் முஸ்லிம் சகோதரர்கள் உடைய மரணத்தில் அவர்களுடைய இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யாமல் தகனம் செய்யப்படுவது என்பது மிக மன வேதனைக்குரிய விடயம் என்பதை இந்த தொற்று நோய் ஆரம்பத்திலிருந்தே எடுத்துக் கூறிக் கொண்டு வருபவன் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளிடம் சமூக ஊடக எழுத்தாளர்களிடமும் சில விடயங்களை கூறிக் கொள்ள எத்தனிக்கிறேன்.
கொரோனா நோயினால் மரணித்தவர்களின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்யலாம் என்று உலக சுகாதார அமைப்பே கூறி உள்ளதை யாவரும் அறிந்த விடயம். ஆனால் இனவாதத்தின் உச்சகட்டத்தின் விளிம்பு காரணமாக முஸ்லிம் சகோதரர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகிறது.
இதை வைத்துக்கொண்டு இன்று அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பவர்களும் சமூக ஊடகங்களில் மாறி மாறி எழுதி இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அரசியல் செய்ய எத்தனிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளை கொச்சை படுத்தும் செயலாக தோன்றுகிறது.
இத்தகைய செயலை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது 20 ஆவது திருத்தம் மூலம் இந்த நாட்டின் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு முழு அதிகாரம் கிடைத்திருக்கிறது இதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம் ஆகவே உடன் இந்த விடயத்தில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.