- அப்ரா அன்ஸார்
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மாத்திரம் பரவியிருக்க இலங்கையில் கொரோனா வைரஸுடன் இனவாத விஷக்கிருமிகளும் பரவியுள்ளது.கொரோனா வைரஸிற்கு தீர்வு கிடைத்தாலும் இனவாத வைரஸ்களுக்கு இலங்கையில் தீர்வே இல்லை என்பது உறுதியானது.கொரோனா தொற்றின் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரித்து வருவது நம் எல்லோர் மனதினையும் உடைத்தெறித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பலைகளையும் தாண்டியும் இலங்கை அரசு இனவாதத்தை தீயாய் மூட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.பாம்போ,பல்லியா எது இறந்து போனாலும் நெருப்பினால் எரிக்காத ஒரு இனத்தின் மரணித்த மனிதனை நெருப்பிலிட்டு எரிக்கின்றார்கள்.இவை அடிப்படை மனித உரிமை மீறல் ,அப்பட்டமான அநீதி,அரசியல் சுயலாபம்,அறிவீனத்தின் உச்சம் ,மனிதாபிமானமற்ற செயல் என்று எந்த வகைக்குள்ளும் இதனை அடக்க முடியும்.அரசியல் காய்நகர்த்தல்களில் முழு மூச்சாய் செயற்பட்ட அரசாங்கம் கொரோனாவின் இரண்டாவது இனிங்ஸின் ஆட்ட வேகத்தை கண்டு சமூகத்தின் மீது அக்கறைகாட்ட பந்தை நகர்த்தியுள்ளது.
இதுவரையில் 48 மரணங்கள் பதிவாகியுள்ளன அதில் பாதி முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன.இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம்.உலகில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களினதும் ஒரே விதமான எதிர்பார்ப்பு தான் இந்த கொடிய கொரோனாவினால் எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்பது.ஆயுட்காலத்தை மறந்து வாழ்ந்த மனிதர்களை இந்த கொரோனா ஆயுட்காலம் பற்றிய கேள்வியை தினமும் சுய மதிப்பீடு செய்ய வைத்துள்ளது.எல்லாவற்றையும் தாண்டி இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு பீதியையும், கவலையையும் அங்கலாய்ப்பையும் ஜனாஸா எரிப்பு உணர வைத்துள்ளது.தாய் நாட்டில் தங்களுடைய உரிமையை இழந்து எதற்கும் விட்டுக்கொடுப்பும்,சகிப்புத் தன்மையுமே சிறந்த தீர்வு என்று பழகிவிட்டார்கள் முஸ்லிம்கள். அதனால் தான் இன்று நம் சமூகத்தை நெருப்பில் வேக வைத்து இனவாதிகள் குளிர்காய்கின்றார்கள். உண்மையில் நிலத்தில் புதைப்பதால் கிருமி அல்லது தொற்று பரவும் என்று உலக சுகாதார நிபுணர்கள் கூறியிருப்பார்களாயின் மக்கள் தான் முக்கியம் என முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்திருப்பார்கள்.ஆனால் இஸ்லாமியர்களை விரோதிகளாக பார்க்கும் சர்வதேச நாடுகள் கூட உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கமைய உடல்களை புதைக்கும் நிலையே காணக்கூடியதாகவுள்ளது.கொரோனாவின் முதலாவது அலையின் போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் படி கொவிட் 19 வைரஸ் காரணமாக மரணிப்போரின் உடல்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.பின்னர் எரிக்கவே வேண்டும் என்று இச் சுற்றறிக்கை அவசர அவசரமாக திருத்தப்பட்டது.அத் தருணத்தில் முதலாவது முஸ்லிம் ஒருவர் தொற்று காரணமாக மரணித்தார்.மரணித்த சில நேரங்களில் அவரது ஜனாஸா எரிக்கப்பட்டது.அப்படியாக இன்று வரை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வருவது வேதனையான விடயமாகும்.உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு மேலதிகமாக உள்நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இரண்டு முறையிலும் இறுதிக் கிரியைகளை நடத்தலாம் என அறிக்கை விட்டது.நிலத்தில் புதைப்பதால் உயிரற்ற உடலில் இருந்து பக்டீரியா பரவலாம் என்றதற்கு ஆதாரங்கள் இருந்தாலும் வைரஸ் பரவும் என்பதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் சுகாதார அமைச்சினால் இன்று வரை முன்வைக்கவில்லை.பரவுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.ஏன் நாம் அவ்வாறான ஒரு அபாய நேர்வுக்கு வழியமைக்க வேண்டும் என்ற விதத்திலேயே அவர்களது கருத்துக்கள் அமைந்திருந்தன.நிலத்தடியில் எவ்வாறு வைரஸ் பரவும் என்பதை நிரூபிப்பதை விட்டு சுகாதார அதிகாரிகளும் அரசாங்கமும் முஸ்லிம்களிடம் ஆவணங்களை எதிர்பார்த்து நிற்பது வேடிக்கையானது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பற்பல வைரஸ்கள் மக்களின் வாழ்க்கையை மோசமாகப் பாதித்துள்ளன.அதில் மிகவும் முக்கியமானது பிளக் டெத் என்று அழைக்கப்படும் பிளேக் மனித வரலாற்றின் மிகவும் மோசமான தொற்று நோய்களில் ஒன்றாகும்.1346 முதல் 1353 வரை உலகம் முழுவதும் இதன் விளைவாக 75 மில்லியன் முதல் 200 மில்லியன் மக்கள் வரை இறந்தனர்.14ம் நூற்றாண்டின் புபோனிக் மற்றும் நிமோனிக் பிளேக் நோயானது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பக்டீரியாவால் ஏற்பட்டது.இது இன்றும் உயிருடன் இருக்கிறது.இது ஒட்டுண்ணிகளின் கடியால் பரவியதாகும்.பிளேக் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்பதற்கான மிகவும் பிரபலமான கோட்பாடு தான் தனிமைப்படுத்தல்களை செயல்படுத்துவதன் மூலம் ஆகும்.பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக தங்கள் வீடுகளில் தங்கியிருப்பார்கள்.அவர்கள் தேவைப்படும் போது மட்டுமே வெளியேறுவார்கள் .அதே நேரத்தில் அவ்வாறு செய்யக்கூடியவர்கள் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளை விட்டு வெளியேறி தனிமையில் வாழ்வார்கள்.தனிப்பட்ட சுகாதாரத்தின் மேம்பாடுகளும் தொற்று நோய்களின் போது நடக்கத் தொடங்கியுள்ளன .அதே சமயம் உடல்களை புதைப்பதற்கு பதிலாக எரித்ததன் மூலம் குறைந்ததாகவும் நம்பப்படுகிறது.எனவே பிளேக் நோய் என்பது குறித்த பக்டீரியாவினால் பரவப்பட்டது.அந் நோயினால் இறந்தவர்கள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவை முழு உலகமும் சேர்ந்து எடுத்த ஒரே தீர்வாகவே உள்ளது.ஆனால் கொவிட் 19 அவ்வாறில்லை. அதற்கு மாற்றமான நிலையாகவே உள்ளது.
எனினும் இலங்கை கடும் போக்கையே பின்பற்றி வருகின்றது.மனிதனை மனிதன் பழிவாங்குகின்ற செயற்பாடாகவே இது உள்ளது.இவை ஒரு நாடகம் என்பது தெட்டத்தெளிவானது .இது மிகக் கவலையான,கேவலமான விடயமாகும்.மனித வர்க்கம் இப்படியா என்று சிந்திக்கும் போது வேதனையாக உள்ளது.சர்வதேச நாடுகளான அமெரிக்கா ,இத்தாலி ,கனடா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவில்லை, புதைக்கிறார்கள். அவர்களே உலக சுகாதாரம் என்ன சொல்கின்றதோ அதை செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது ஏன் இலங்கையில் மட்டும் நடைமுறைப்படுத்தவில்லை? மக்களால் தலைமைத்துவத்தைப் பெற்ற தலைவர்கள் இதற்கு பதில் கூற வேண்டும்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களின் மனதை உடைக்காது அவர்களுடைய மனம் அமைதிப்படும்படியான உறுதியான சட்டத்தை கொண்டு வருதல் வேண்டும்.இறந்த உடலை புதைப்பதன் மூலம் விஷக் கிருமிகள் பரவுவதாக இலங்கையின் சுகாதார மேதைகள் தெரிவிக்கின்றனர்.அவர்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.சமூக இடைவெளியே ஒரு அலகு இடைவெளி பேணுமாறு தானே கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எட்டு அடியின் கீழ் புதைக்கப்பட்ட பின் அதுவும் இறந்த பின் வைரஸ் பரவும் என்பது கேலியான குற்றச்சாட்டாகவே உள்ளது.ஏன் கொரோனா தொற்று நோயாளார்கள் மலசல கூடம் போகவில்லையா?அதன் கழிவுகள் பூமிக்குள் போகவில்லையா?இவற்றின் விஷக் கிருமிகள் தாக்காதா? கொரானா தொற்று நோயாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கு தொற்று இருக்கின்றது என அறியப்பட்ட பின்னும் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.அதுவரையில் அவர்கள் வீடுகளிலே தானே இருந்தார்கள்? அப்போது பரவாத கொரோனா உயிர் உடலை விட்டு பிரிந்த பின்பு அந்த பிரேதத்தை அடக்குவதன் மூலம் பரவி விடுமா? இவை இந்த சுகாதார அமைச்சிற்கும் , அரசிற்கும் புரியவில்லையா? இல்லாவிட்டால் புரியாமல் நடிக்கிறார்களா? என்பது புரியாத புதிராகும்.
கொரோனாவின் முதலாவது அலையில் பல விதங்களில் ஜனாஸாக்களுக்கு அநியாயம் நடந்தது.குறிப்பாக கொரோனா தொற்று இல்லாத வேறு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள் கூட எரிக்கப்பட்டனர். இதில் 46 வயதான பாத்திமா ரிஸானா மற்றும் 44 வயதான றினோஸா பிரதானமானவர்கள் .இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் ,முஸ்லிம் தலைவர்களும் , மக்களும் எவ்வளவோ போராடியும் கடைசியில் தோல்வியிலே முடிந்தது.அதிகாரிகளினால் சொல்லப்பட்ட பதிலின் விதம் ஜனாஸாக்களை இனி அடக்கம் செய்வதற்கு அரசிற்கு கடுகளவும் நோக்கம் இல்லை என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டது.அதன் பின்னர் தேர்தலில் நேரத்தையும் ,காலத்தையும் கடத்திய அரசியல்வாதிகளும் ,மக்களும் கொவிட்டின் வீரியத்தை மறக்கத் தொடங்கினர்.உயர் வீச்சத்தில் இரண்டாவது அலையோடு உட்புகுந்த கொரோனா மீண்டும் தனது வேலையை செய்து கொண்டிருக்கின்றது .மொத்த மரணங்களுள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முஸ்லிம்களின் மரணங்களும் உள்ளடங்குகின்றன.தொடர்ந்தும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கு நடக்கின்ற அநியாயத்தை பொறுக்க முடியாது முஸ்லிம் தலைவர்கள், அமைப்புக்கள், சர்வதேச நாடுகள் மற்றும் முஸ்லிம் மற்றும் ஏனைய மதத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் உரிமைக் கோஷம் எழுப்பினார்கள்.எனினும் கொள்கையில் பிடிவாதமாக இருக்கின்ற இந்த அரசாங்கத்தை என்ன தான் சொல்வது? இந் நிலையில் இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு முஸ்லிம் சமூகத்தால் வழங்கப்பட்ட அழுத்தத்தினால் இவ் விடயத்தை அமைச்சரவைக்கு கொண்டு சென்று பல விவாதங்களுக்கு பின்பு முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிப்பதற்காக அங்கீகாரத்தை அரசு வழங்கியது. எனினும் அவ்விடயத்திலும் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டதையே உணர்கிறார்கள்.முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பதற்கு அங்கீகாரம் வழங்கியது என கூறிய அரசு பின்னர் அனுமதி வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜெயரூவன் பண்டார தெரிவித்துள்ளார்.எனவே ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்களை முட்டாளாக்கும் திட்டத்தையே இவர்கள் பின்பற்றி வருவது தெட்டத் தெளிவானது.இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் தான் முஸ்லிம்களை தாண்டி முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர்களும் அரசாங்கத்தின் இந் நடைமுறை தவறானது என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள் ஆனால் அரசியல் சுய இலாபத்திற்காக முஸ்லிம் என்ற பெயர் தாங்கி அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாகவும் கூவி வருவதை காணலாம்.தொடர்ந்தும் இந் நாட்டில் உரிமைகளை இழந்து நசுக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம் சமூகம் கண்மூடித்தனமாக இனியும் செயற்படக் கூடாது.மாற்று மத ஒருவரின் ஜனாஸா எடுத்துச் செல்வதை கண்டு எழுந்து மரியாதை செலுத்திய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தலைவராகக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் அநியாயத்திற்கு விலை போக மாட்டோம் அநியாயத்தை கண்டு பதுங்கவும் மாட்டோம் என உறுதிமொழி பூண வேண்டும்.
கொவிட் 19 தொற்றின் மூலம் மரணமாகின்ற ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக வேப்பங்குளத்தை சேர்ந்த ஒரு சகோதரர் தனது ஒரு ஏக்கர் காணியை வக்பு செய்துள்ளார். எனவே ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் கிடைத்தவுடன் குறித்த இடத்தில் நல்லடக்கம் செய்ய முடியும் .இன்ஷா அல்லாஹ் எனவே சிறந்த முடிவு கிடைக்க பிரார்த்திப்பதோடு முஸ்லிம்கள் முயற்சியை கைவிடாது தொடர்ந்து போராடுவோமாக.
நன்றி - மீள்பார்வை