தொடர்ந்தும் சுமார் மூன்றரை வருட காலத்திற்கு கொரோனா தொற்று சூழ்நிலையில்யுடன் பொதுமக்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்ப்படும் என்று சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று பாராளுமன்றத்தில் கேட்ட வாய்மூலமான கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் ஆரம்ப காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் தற்போது பின்பற்றப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பே எமக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. அந்த அமைப்பே இந்த வைரஸ் நோயை குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் ஆரம்பகால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாம் ஆரம்ப காலத்தில் முழு நாட்டையும் முடக்கி இருந்தோம். இன்று மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பதையடுத்து முழு நாட்டையும் முடக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எமக்கு ஆலோசனை வழங்கவில்லை. இந்த வைரஸ் உடனேயே நாம் வாழவேண்டிய நிலையுள்ளது. முழு நாட்டையும் எப்பொழுதும் முடக்கி வைக்கவும் முடியாது.
அன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு அமையவே இது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில், அவரை கொரோனா தடுப்பு சிறப்பு குழுகூட்டத்திற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்; இதன் போது குறிப்பிட்டார்.
அனில் ஜாசிங்க மற்றும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளராக பணியாற்றிய வைத்தியர் ஜயருவன் பண்டார ஆகியோர் அந்த பதவியில் இருந்து எந்த அடிப்படையில் நீக்கப்பட்டார்கள்? என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார்..
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், டொக்டர் அனில் ஜாசிங்கவுக்கு பதவி உயர்வு என்ற ரீதியில் சுற்றாடல்துறை அமைச்சில் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரை எமது கொரோனா வைரஸ் தடுப்புக்கான சிறப்பு செயலணி குழுவுக்கு மீண்டும் அழைக்கப்படுவதாக அன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டேன் என்றார்.
டொக்டர் ஜயருவன் பண்டாரவை அமைச்சின் ஊடக பேச்சாளராக செயற்படுமாறு அறிவித்திருந்தோம். அப்பொழுது, புதிய செயலாளர் நாயகத்தை நியமிக்க வேண்டிய கோரிக்கையை அமைச்சரவையில் முன்வைக்க வேண்டி ஏற்பட்டது. அது தொடர்பான நேர்முகப் பரீட்சையும் இடம்பெற்றது. இதன் பின்னர் மீண்டும் அமைச்சரவைக்கு செல்லவேண்டி ஏற்பட்டது. பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்கும் வரையில் வைத்தியர் ஜயருவன் பண்டார ஊடக பேச்சாளராக செயற்பட்டார். இவர் குறுகிய காலத்திற்கு ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார். புதிதாக பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டிருப்பதால் இந்த நிலையில் ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அவர் விருப்பம் தெரிவித்தார். இதுதான் ஏற்ப்பட்ட நிலைமையாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.