Our Feeds


Friday, November 20, 2020

www.shortnews.lk

அமெரிக்க வரலாற்றில் பொறுப்பற்ற ஜனாதிபதியாக ட்ரம்ப் இருப்பார் - ஜோ பைடன் தாக்கு

 

`ட்ரம்ப் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம், அவரது செயல்கள் அனைத்தும் மூர்க்கத்தனமாக உள்ளது’ என்கிறார் பைடன்



``அமெரிக்க வரலாற்றில் பொறுப்பற்ற ஜனாதிபதிகளில் ஒருவராக டொனால்ட் ட்ரம்ப் இருப்பார்" என்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெறறிருக்கும் நிலையில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பதற்றமான அரசியல் சூழலை உருவாக்கி வருகிறது.


இந்நிலையில், நேற்று குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியின் ஆளுநர்களுடனான சந்திப்புக்க்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன், ட்ரம்பின் அசாதாரண நடவடிக்கைகள் பற்றி பேசினார், "ட்ரம்பின் நம்பமுடியாத பொறுப்பற்ற தன்மைக்கு அமெரிக்கர்களே சாட்சியாக உள்ளனர். இதன் விளைவாக, ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி நம்பமுடியாத அளவுக்கு தீங்கு விளைவிக்கும் செய்தி உலகின் பிற பகுதிகளுக்கு பரவி வருகிறது" என்று ஜோ பைடன் கூறினார்.


அப்போது, டொனால்ட் ட்ரம்ப் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதை பற்றி ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ஜோ பைடன், "ட்ரம்ப் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம், அவரது செயல்கள் அனைத்தும் மூர்க்கத்தனமாக உள்ளது" என்றார்.


மேலும், "ட்ரம்ப் மற்றும் அவரது சட்டக் குழுவும் அதிபர் தேர்தல் முடிவுகளை முறியடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி குறித்து ஆதாரமற்ற தகவல்களை முன் வைக்கின்றனர். ட்ரம்ப்பின் தற்போதைய செயல்களே, அவர் அமெரிக்க வரலாற்றில் கொஞ்சமும் பொறுப்பற்ற அதிபராக இருப்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கும்” என்றார்.


தனது நிர்வாகத்தை கட்டியெழுப்புவதில் முன்னேறி வருவதாகவும் கூறிய ஜோ பைடன், கருவூலத்திற்கான செயலாளரை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், அவரது இடைநிலைக் குழு ஜோ பைடனின் வெள்ளை மாளிகை ஊழியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.


இறுதியாக, ``கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் அதை விரைவாக விநியோகிக்கும் யோசனையில் உள்ளோம். எந்தவொரு சூழலிலும் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை, நாங்கள் கொரோனா வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம்" என்றார் ஜோ பைடன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »