“முஸ்லிம்கள் அயல்நாடான இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் மரணத்த தமது உறவுகளை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் அனுமதியுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் இந்த நியாயமான கோரிக்கையை அடிப்படைவாதத்துடன் முடிச்சுப் போடுகின்றார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இல்லாமில்லை”
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கும், மண்ணில் அடக்கம் செய்யவும் முடியுமென்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இந்த ஆலோசனையை ஏற்று உலகில் 189 நாடுகள் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதித்துள்ளன. இலங்கையில் மாத்திரம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத விழுமியங்களுக்கு இடங்கொடுக்காது கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை தகனம் செய்ய வேண்டுமென்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதனை மத அடிப்படையில் வழக்கமாகக் கொண்டுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையடைந்துள்ளார்கள். இலங்கையின் இந்த தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்கள் உலக அளவில் முன் வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு,இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காமை ஒடுக்குமுறையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
கொரோனர் தொற்றினால் மரணிக்கின்றவர்களின் இறுதி கிரியைகளை நடத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை இலங்கை பின்பற்ற வேண்டும். இலங்கையில் மத ரீதியான சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையை கேட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்று முஸ்லிம் தலைவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், இன்னும் முஸ்லிம்களின் கோரிக்கைளுக்கு சாதகமாக பதில் கிடைக்கவில்லை.
கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்வதனை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் தங்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கையாகவே கருதுகின்றார்கள். உலகிலுள்ள 189 நாடுகளில் கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளபோதும் இலங்கை மாத்திரம் அதற்கு விதி விலக்காகவும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை கவனத்திற் கொள்ளாமலும் எடுத்துள்ள தீர்மானத்தை வைத்தே முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரானதொரு நடவடிக்கை என்று கருதிக் கொள்கின்றார்கள்.
இதே வேளை, கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளார் என்று முகநூலிலும்;, சில இணைய தளங்களிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதனை உண்மையென நம்பிய முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கு நன்றிகளை முகநூல் வாயிலாக தெரிவித்தார்கள்.
அத்தோடு ஆட்சியாளர்களின் முஸ்லிம் ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சனம் செய்தார்கள். இதனிடையே 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீவிர ஆதரவாளர்கள் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியமையால்தான் இந்த முடிவினை ஜனாதிபதி எடுத்துள்ளார். அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளதென்று ஆர்ப்பரித்துக் கொண்டார்கள்.
ஆயினும், ஜனாதிபதியும், அரசாங்கமும் கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கவில்லை. உண்மைக்கு புறம்பான தகவல்கள் என்று தேசிய ஊடகங்களில் அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. அத்தோடு கடும்போக்கு பௌத்த இனவாதிகளும், தேரர்களும் கொரோனாவினால் மரணிக்கின்ற முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாதென்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களை உலக நாடுகளில் உள்ளவை போன்று அடக்கம் செய்வதற்கு அனுமதியுங்கள் என்று முஸ்லிம் தலைவர்களும், உலமாக்களும் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பதனை பௌத்த கடும்போக்குவாதிகள் அடிப்படைவாதம் என்றும், அரசாங்கம் அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாதென்றும் கடும்தொனியில் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கொரோனாவினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள பொதுத் தீர்மானத்தை பௌத்தர்களும், இந்துக்களும், கத்தோலிக்கர்களும் ஏற்று அமைதியுடன் இருக்கின்ற போது முஸ்லிம்கள் மாத்திரம் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டுக் கொண்டிருப்பது அடிப்படைவாதமாகும் என்றும் பௌத்த கடும்போக்குவாதிகள் மேலும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் உலகில் எங்குமில்லாத ஒன்றை கோரவில்லை. அயல்நாடான இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் அனுமதியுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் இந்த நியாயமான கோரிக்கையை அடிப்படைவாதத்துடன் முடிச்சுப் போடுகின்றார்கள் என்றால் இவர்களின் உள்நோக்கம் தெளிவாகின்றது.
கொரோனா தொற்றினால் மரணிக்கவர்களை அடக்கம் செய்ய வேண்டும். உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று முஸ்லிம்களுக்கு முன்னரே கத்தோலிக்கர்கள்தான் முதலில் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்கள். நீதிமன்றத்தில் கூட வழக்கு தொடர்ந்தார்கள். இன்றும் அவர்கள் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், முஸ்லிம்கள் மாத்திரம் அடக்கம் செய்வதற்கு கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று பௌத்த கடும்போக்குவாதிகளும், தேரர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம்களை இன்னும் மோசமாக சித்தரிப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் பொது விதிகளுக்கு கட்டுப்பாடாதவர்கள் என்று காட்டுகின்றார்கள். ஆனால், முஸ்லிம்களின் நியாயத்தையும், சட்டத்திற்கு சவாலற்ற நிலைப்பாட்டையும், உலாக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளையும், ஏனைய நாடுகளிலுள்ள நடைமுறைகளையும் சிந்திக்காது ஊடகங்களில் அறிக்கைகளை விடுக்கின்றார்கள். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட அடிப்படைவாதமென்று தெரிவித்து அடக்க நினைக்கின்றார்கள்.
முஸ்லிம் தலைவர்களும், உலமாக்களும் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதனாலேயே நல்லடக்கம் செய்வதற்கு மறுக்கப்படுகின்றதென்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்றவர்களும் முஸ்லிம்களிடையே இருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளை அடக்கி வாசித்து, அடிமைகள் போல் ஒடுங்கி நின்றுதான் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று இவர்கள் கருதுகின்றார்கள். அதே வேளை, முஸ்லிம்கள் இதுவிடயத்தில் ஆர்ப்பாட்டங்கள் எதனையும் செய்யவில்லை. மிகவும் பக்குவமாகவும், நாட்டில் இன்றுள்ள இனவாத சூழலையும், அதுதொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கின்ற சிக்கல்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியே முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள். கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்த வேளையில்; பள்ளிவாசல்களை மூட வேண்டுமென்று சுகாதாரதுறையினர் அறிவிப்பதற்கு முன்னரே முஸ்லிம்கள் பள்ளிவாசல்களை மூடினார்கள். இத்தகைய நிலையில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை முஸ்லிம்களின் தலையில் கட்டிவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே முஸ்லிம்கள் இத்தகைய முடிவினை எடுத்தார்கள்.
இலங்கையில் முதற்தடவையாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட போது சில இனவாதிகளும், இனவாத ஊடகங்களும் முஸ்லிம்களினால்தான் கொரோனா தொற்று ஏற்பட்டதென்று பொய்யான செய்திகளை மக்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே முஸ்லிம்களின் கோரிக்கைகளில் அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவும், முஸ்லிம்கள் குறித்து பௌத்த சிங்கள மக்களிடையே ஏற்கனவே கட்டுபிக்கப்பட்டுள்ளவற்றை மேலும் பெரிதாக்கும் முயற்சிகளையும் சிலர் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய அரசாங்கம் பௌத்த கடும்போக்குவாதிகளினதும், அமைப்புக்களினதும்,தேரர்களினதும் எதிர்ப்புக்களையும் தாண்டி கொரோனர் தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
அதனால், முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதில் கிடைக்குமென்று எண்ணும் சிற்றரசியலையே முஸ்லிம்கள் மேற்கொண்டுள்ளார்கள். நாட்டின் இன்றைய நிலையையும், அரசியல் நகர்வுகளையும் புரிந்து கொள்வதில் முஸ்லிம்களும், முஸ்லிம் தலைவர்களும் நீண்டகாலமாக தவறிக் கொண்டே இருக்கின்றார்கள். இதற்கு முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடையே காணப்படும் சுயநலப்போக்கே பிரதான காரணமாகும். அத்தோடு, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தேர்தலில் தமது வெற்றிக்கே முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமது வெற்றியை உறுதி செய்து கொள்வதற்கு எந்த பிசாசுடனும் கூட்டு வைத்துக் கொள்வார்கள். தேர்தல் முடிந்ததும் ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொள்வதற்கு எந்தக் கோரிக்கைக்கும் தலையாட்டி கைகளை உயர்த்திக் கொள்வார்கள். அவர்களுக்கு சமூகப்பற்றை விடவும் சுயநலன் மீதுதான் அதிகபற்றாகும்.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அமைவதற்கு பௌத்த கடும்போக்குவாதிகளும், பௌத்த அமைப்புக்களும் பிரதான பங்களிப்புக்களை செய்துள்ளமையை அரசாங்கம் மறக்கவில்லை.இவர்களை எதிர்த்து எந்தவொரு காரியத்தையும் அரசாங்கம் செய்யவும் மாட்டாது. 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தைக் கூட பௌத்த பீடங்களும், பௌத்த கடும்போக்குவாதிகளும் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், அரசாங்கம் அதனை நிறைவேற்றிக் கொள்வதில் பிடியாக இருந்தது. அரசாங்கத்தை பொறுத்தவரை 20ஆவது திருத்தச் சட்டம் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும். இதற்காகவே அவசரமாகவும், அரசாங்கம் அமைவதற்கு காரணமானவர்களையும் கவனத்திற் கொள்ளாது சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொண்டது.
ஆனால், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கும் போது பௌத்த கடும்போக்குவாதிகளினதும்,பௌத்த பீடங்களினதும், பௌத்த அமைப்புக்களினதும் எதிர்ப்பை மீண்டும் ஒரு தடவை சம்பாதிக்க வேண்டியேற்படும். ஜனாதிபதி நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்ட மறுகனவே அதற்கு எதிராக அறிக்கைவிடுத்தார்கள். முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராகவே செயற்பட்டவர்கள். ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாத காரணத்தினாலேயே ஆட்சியாளர்களை புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 20ஆவது திருத்திற்கும் ஆதரவு வழங்கியுள்ளார்கள். முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சந்தர்ப்பவாத அரசியலிருந்து விடுபடவில்லை என்பதனையே இது காட்டுகின்றது.
20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினால் பௌத்த பீடங்களினதும், அமைப்புக்களினதும், கடும்போக்குவாதிகளினதும் எதிர்ப்பை அரசாங்கம் பெற்றுள்ளது. அதனை இல்லாமல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆட்சியாளர்கள் உள்ளார்கள். அதனால், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிப்பதாக இருந்தாலும், பௌத்த கடும்போக்காளர்கள் உள்ளிட்டவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது இருக்க வேண்டும். பௌத்த கடும்போக்குவாதிகளையும், தேரர்களையும் மீண்டும் ஒரு தடைவ கவனத்திற் கொள்ளாது முடிவுகளை எடுத்துக் கொண்டால், ஆட்சியாளர்களுக்கு பௌத்தர்களிடையே இருக்கின்ற அபரிதமான செல்வாக்கில் சரிவு ஏற்படும். இந்த நிலையை உருவாக்குவதில் பௌத்த கடும்போக்குவாதிகளும், பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முன் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆதலால், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதற்காக, இன்றைய ஆட்சிக்கு காரணமானவர்களை புறக்கணிக்கும் முடிவினை ஆட்சியாளர்கள் எடுக்கமாட்டார்கள். இந்த அரசியல் போக்கையும், பௌத்த தேரர்களும், பௌத்த கடும்போக்காளர்களும் அரசியலில் செலுத்திக் கொண்டிருக்கும் செல்வாக்கையும் கவனத்திற் கொள்ளாது முஸ்லிம்கள் தங்களின் உரிமைகள் குறித்த நகர்வுகளை மேற்கொள்ள முடியாது.
அதனால், கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்குரிய அனுமதி பௌத்த இனவாதிகளினதும், கடும்போக்குவாதிகளினதும் எதிர்ப்பையும் தாண்டி கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. இதனிடையேஇலங்கை அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்வதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபையின்; இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி மற்றும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஆகிய தினங்களில் உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களின் மூலம் நோய்த்தொற்று பரவுகை தொடர்பில் விளக்கம் அளித்துள்ளது.இதில் சடலங்களின் ஊடாக நோய்த்தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக தெரிவித்திருந்தது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காமை ஒடுக்குமுறையாகும். கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமை சமூகப்பிரச்சினையாக உருவாகலாம்.கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான நாட்டம் இதனால் குறையக்கூடும். கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமை, நோய்த்தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் குறிப்பிட்டுள்ள கருத்துக்களில் உள்ள உண்மைகளை அரசாங்கம் பௌத்த கடும்போக்குவாதிகளுக்கும், பௌத்த அமைப்பினருக்கும் தெளிவுபடுத்த வேண்டும். சுகாதார நிபுணத்துவ குழுவின் முடிவு என்று வாழங்காதிருக்க முடியாது.
இதே வேளை, உலக நாடுகளில் உள்ளது போன்று கொரொனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு சுகாதாரக் நிபுணத்துவக் குழுவினர் அனுமதியளித்தால் கூட பிரச்சினைகளும், விமர்சனங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. முன்னர் தகனம் செய்வதே சிறந்ததென்று தெரிவித்தமை எதற்காக என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியேற்படும்.
அத்தோடு பௌத்த இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புக்களை காட்டாது இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும். பௌத்த கடும்போக்குவாதிகளை பகைத்துக் கொள்வதற்கு ஆட்சியாளர்கள் விரும்பமாட்டார்கள். ஆதலால், முஸ்லிம்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதில் இன்னும் இழுபறிகளே தொடரும் என்றே கருத வேண்டியுள்ளது.
சஹாப்தீன்