லவ் ஜிகாத் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதனை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டம் அம்மாநில சட்டசபையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் சட்டப்பிரிவு 21 படி, ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் நபர்களை திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு.
இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம் லவ் ஜிகாத் சட்டத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது வரை 'லவ் ஜிகாத்' என்ற சொல்லாடல் இந்தய சட்ட அமைப்பில் கிடையாது.
இந்து பெண்களை, இஸ்லாமியர்கள் திட்டமிட்டு மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறி சங் பரிவார் கொண்டு வந்த சொல்லே "லவ் ஜிகாத்".
இதே சட்டத்தை பாஜக ஆளும் ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜாமினில் வெளிவர முடியாத சட்டமாக இது அமையும் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் மிஸ்ரா தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், மதம் மாற்றி நடைபெறும் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே, மாவட்ட ஆட்சியருக்கு அதனை தெரியப்படுத்த வேண்டும் என்ற விதி இதில் கொண்டு வரப்படுகிறது.
"கட்டாயப்படுத்தி, ஏமாற்றி, அல்லது ஆசை வார்த்தைகள் கூறி நடைபெறும் மதம் மாற்று திருமணங்களை செல்லாது என்ற சட்ட விதி இருக்கும். இந்த குற்றத்திற்கு உதவி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"மாநிலத்தில் காதல் என்ற பெயரில் லவ் ஜிகாதுக்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதற்கு எதிராக சட்ட விதிகள் கொண்டுவரப்படும்" என்று ஏற்கனவே மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவும், லவ் ஜிகாதுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முனைப்பு காட்டினார்.
"காதல் மற்றும் பணம் என்ற பெயரில் பெண்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். சரியான ஆய்வுக்குபின், இது தொடர்பான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசினார்.
இந்திய சட்ட அமைப்பில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது. அதே போன்று இந்த மாதிரியான எந்த வழக்குகளும் மத்திய புலனாய்வு துறையில் பதிவு செய்யப்படவில்லை. மேலும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 25 படி, ஒருவர் எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதனை பின்பற்ற உரிமை உள்ளது என மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த ஆண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
எனினும், அவர் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்த இது தொடர்பான இரு வழக்குகளை குறிப்பிட்டார்.
இதில் ஒன்று கேரள மாநில ஹதியா வழக்கு. மதம் மாற்றி திருமணம் செய்து கொண்ட ஹதியா, தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே செய்ததாக தெரிவித்தும் கேரள உயர்நீதிமன்றம் அவர்கள் திருமணத்தை ரத்து செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம், அவர்களது திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இப்படியொரு சட்டம் கொண்டுவர முடியுமா?
அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைப்படி இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவர முடியாது என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
"ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஆல் வழிநடத்தப்படும் பாஜக, அரசியல் சாசனத்தை மதிப்பதில்லை. அதில் இருக்கக்கூடிய வதிகள், நிபந்தனைகள், வழிமுறைகளை மீறுவதே இவர்களின் நடைமுறையாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
ஆண்டின் நிதி அறிக்கையில் இருந்து பொது வளங்களை விற்பது வரை விவாதங்களே இல்லாமல் ஆளும் பாஜக அரசு சட்டங்களை நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட அருள்மொழி, லவ் ஜிகாத் சட்டத்தை சில மாநிலங்கள் கொண்டு வரலாம் என்றே தோன்றுவதாக தெரிவித்தார்.
ஆனால் அப்படி இந்த சட்டம் கொண்டு வந்தால், இது அடிப்படை உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கு எதிரானது என்று அவர் கூறுகிறார்.
"ஜிகாத்" என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் வகையில் இருக்கிறது. அப்போது வேறு மதத்தினர் இந்து பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்த சட்டத்தில் வராதா? வரும் என்றால், இந்தியாவில் யாரும் மதம் மாறித் திருமணம் செய்து கொள்ள தடை விதிக்கப் போகிறார்களா? மனுஸ்மிரிதியை சட்டமாக்கப் போகிறார்களா?" என்று வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி எழுப்புகிறார்.
இஸ்லாத்தில் பலவந்த மதமாற்றம் கிடையாது.
இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்த மட்டில் எவரையும் பலவந்தப்படுத்தி இஸ்லாத்தில் இணைப்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இஸ்லாத்தை கற்று விரும்பி எவரும் இஸ்லாத்தை தமது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர இஸ்லாத்தை தினித்து ஒருவருக்கும் இஸ்லாத்தை வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியாது என்கிறது இஸ்லாம்.
அப்படி யாராவது விருப்பமின்றி வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அது இஸ்லாத்தை தழுவியதாக கருதப்படவும் மாட்டாது.
இந்நிலையில் தான் முஸ்லிம்கள் இஸ்லாத்தை யாருக்கும் தினிப்பதில்லை. விரும்பியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முடியும். விரும்பியவர்கள் இஸ்லாத்தை விட்டும் வேறு ஒரு மதத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியும் என இஸ்லாம் தெளிவாக தெரிவிக்கின்றது.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை.
அல்குர்ஆன் (2 : 256)
“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும்.
அல்குர்ஆன் (18 : 29)