சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராவதை உறுதி செய்து இருக்கிறார்.
ஜோ பைடன் 2009 முதல் 2017ஆம் ஆண்டு வரை, பராக் ஒபாமா நிர்வாகத்தில், துணை அதிபராக இருந்தவர்.
இந்த நேரத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகிக்கப் போவதாக பல தளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.
இந்த நிலையில், அந்த தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஒபாமா.
இன்னும் இரண்டு நாட்களில், பராக் ஒபாமாவின் வாழ்கைக் கதை (A Promised Land) வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக அவரது நேர்காணல் ஒளிபரப்பாகியிருக்கிறது.
ஜோ பைடனுக்கு, நீங்கள் எப்படி உதவுவீர்கள் என்று சிபிஎஸ் செய்தி நிறுவனம் கேட்டதற்கு "அவருக்கு என் ஆலோசனை தேவை இல்லை. என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் நான் அவருக்கு உதவுவேன். நான் இப்போது வெள்ளை மாளிகையில் மீண்டும் வேலை செய்ய திட்டமிடவில்லை" என்று ஒபாமா பதில் அளித்தார்.
ஒபாமாவின் பதவிக்காலத்தில் அவரது நிர்வாகத்தில் இடம்பெற்ற சூசன் ரைஸ், மிகெல்லி ஃப்ளோர்னி போன்றோருக்கு ஜோ பைடன் தனது புதிய நிர்வாகத்தில் சில முக்கிய பதவிகளை வழங்க ஆலோசிப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில், ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று ஒபாவிடம் கேட்டது சிபிஎஸ்.
அதற்கு "நான் சில விஷயங்களைச் செய்யமாட்டேன், ஏன் என்றால் மிஷெல் என்னை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று ஒபாமா பதில் அளித்தார். மேலும், "என்னது...? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்றவாறே அவரது (மிஷெலின்) கேள்வி என்னை நோக்கி இருக்கும்" என வேடிக்கையாக பதில் கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் பராக் ஒபாமா.