(எம்.எப்.எம்.பஸீர்)
தியவன்னா ஓயாவில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது வள்ளம் கவிழ்ந்து இறந்ததாக கூறப்பட்ட 26 வயதுடைய ராஜேந்ரன் ரவீந்ரன் எனும் இளைஞனின் மரணமானது, பாதுகாப்பு படையின் படகொன்று மோதியதால் இடம்பெற்றது என குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை மறைக்க, குறித்த இளைஞனுக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவரது சடலத்தை தகனம் செய்து, சாட்சியங்களை அழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ராஜகிரிய, வெலிக்கடை, முத்கமுவ பகுதி, கால்வாய் கரை பாதையை சேர்ந்த 11/9/ பீ எனும் இலக்கத்தை கொண்ட வீட்டில் வசித்த 5 வயதான ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாதமான பெண் குழந்தையொன்றின் தந்தையான 26 வயதான ராஜேந்ரன் ரவீந்ரன் எனும் இளைஞனே உயிரிழந்திருந்தார்.
இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்ல பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் படகு மோதியதிலேயே தனது சகோதரன் கொல்லப்பட்டுள்ளதாக, குறித்த இளைஞனின் மூத்த சகோதரியான மெக்ஸி ஜென்ஸி தெரிவித்தார்.
'எனது சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரும் தவறு இழைத்துள்ளனர். அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்தமையே அவர்கள் செய்த தவறு. எனினும் தியவன்னா ஓயா பாயும், தியன உயன பூங்கா அருகே உள்ள நீல பாலத்தின் கீழ், உள்ள வாயிலின் ஒரு பகுதி கடந்த 6 மாதங்களாக திறந்தே வைக்கப்பட்டுள்ளது.
அதனால் அவர்கள் அந்த வாயிலால் நுழைந்து அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு சென்றிருக்கலாம். அது தொடர்பில் சட்டத்தை அமுல் செய்வதானால் அவர்களைக் கைது செய்திருக்கலாம். மாறாக இவ்வாறு படகினால் மோதிக் கொள்வதை ஏற்க முடியாது.' என உயிரிழந்த இளைஞனின் மூத்த சகோதரி தெரிவித்தார்.
கடந்த 11 ஆம் திகதி, அதிகாலை ஒரு மணியளவில், குறித்த இளைஞனும் அவரது நண்பரும் இராணுவத் தளபதியின் இல்லம் எனக் கூறப்படும் வீட்டின் பகுதியை அண்மித்த பகுதிக்கு சென்றுள்ளனர். நீல பாலத்தின் கீழால் அவர்கள் அவ்வாறு சென்றுள்ளனர். சாதாரணமாக மீன் பிடிக்க இளைஞர்கள் இவ்வாறு செல்வதாகவும், அவ்வாறு அதி உயர் பாதுகப்பு வலயத்துக்குள் நுழையும் போது வேறு நாட்களில் கடற்படையினர் அவர்களை அங்கிருந்து துரத்துவதாகவும், உயிரிழந்த இளைஞனின் வீட்டுக்கு அருகே வசிக்கும் சாமிந்த தினேஷ் எனும் இளைஞன் தெரிவித்தார்.
தானும் தியவன்னா ஓயாவில் மீன் பிடிப்பதாக கூறிய அந்த இளைஞன், குறித்த இளைஞர்கள் இருவரும் அங்கு மீன் பிடிக்க சென்றபோது, மின் விளக்குகள் ஊடாக அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பாதுகாப்புத் தரப்பினர் சமிக்ஞை செய்துள்ளதாகவும், அதற்கிணங்க அவர்கள் அங்கிருந்து வெளியேற தயாரான போதே, அவ்விருவரும் இருந்த வள்ளத்தை இருட்டில் வந்த படகொன்று வேகமாக மோதியுள்ளதாகவும் அந்த இளைஞன் சுட்டிக்காட்டினார்.
குறித்த இளைஞன் வள்ளம் கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதும், அவ்வாறு வள்ளம் கவிழ்ந்ததால் மரணம் ஏற்பட்டிருப்பின், இறந்தவரின் முகத்தில் உள்ள தகர்வுகள், அவர் செனற வள்ளத்தில் படகு மோதியமைக்கான அடையாளங்கள் எப்படி ஏற்பட்டதென அந்த இளைஞன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவை தொடர்புகொண்டு வினவிய போது,
இந்த சம்பவத்தில், உயிரிழந்த இளைஞருடன் சென்ற மற்றைய இளைஞன், பொலிசாருக்கு அவ்வப்போது முன்னுக்கு பின் முரணான வாக்கு மூலங்களை வழங்கியுள்ளமையானது சிக்கலை ஏரற்படுத்தியுள்ளது.
ஒரு சந்தர்ப்பத்தில், படகொன்று வந்தமையால் இருவரும் இரு பக்கங்களுக்கு பாய்ந்ததாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் படகொன்று வந்து தங்களை மோதியதாகவும் வாக்கு மூலங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். ' என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞனுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதா என இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவிடம் வினவிய போது, அவர் அதனை உறுதி செய்தார். அவ்விளைஞனின் சடலம், கண் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள பொலிஸ் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, உயிரிழந்த இளைஞனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக போலியாக அறிக்கை விடப்படுவதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சடலத்தை தகனம் செய்வதன் ஊடாக சாட்சியங்களை அழிப்பது இதன் நோக்கமாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் குறித்த இளைஞனின் வீடு உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள 5 வீடுகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்துள்ளது. அப்பகுதியில் இருவர் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றமையை மையப்படுத்தி இவ்வாறு அந்த 5 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டிருந்துள்ளது.
அதன் பின்னர் அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் கடந்த 3 ஆம் திகதி பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர் வருகை தந்து, பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியதாகவும் உயிரிழந்த இளைஞனின் சகோதரி மெக்ஸி ஜென்ஸி குறிப்பிட்டார்.
இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட கடந்த 12 ஆம் திகதியும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன்போதும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றே சான்றிதழ் கிடைத்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறான பின்னணியிலேயே கடந்த 13 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மீள பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கூறி அதற்கான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து இரு மணி நேரம் கழித்து உயிரிழந்த இளைஞனுக்கு கொவிட் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவித்ததாகவும் கூறும் உயிரிழந்த இளைஞனின் சகோதரி, பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் வெளியிடப்படுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
எவ்வாறாயினும், குறித்த இளைஞனுக்கு கொவிட் தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள பின்னணியில், நேற்று மாலை அவ்விளைஞனின் சடலம் தகனம் செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி