சஜித் பிரேமதாசவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமான கேள்விக்கு மிகவும் அறிவுபூர்வமாகவும் யதார்த்தபூர்வமாகவும் பதில் கொடுத்த உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸிற்கு நன்றி தெரிவிக்கின்றோம் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்பது நாட்டில் பயங்கரவாதத்தை படித்துக்கொடுக்கும் ஷரீயா வித்தியாலயம் என்றும் அதை அரசு கையகப்படுத்துமா என்றும் காவிந்த ஜயவர்த்தன கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பேராதெனியவைவிட அதிக பௌதீகவளம் கொண்டது என்றும் அதை அனைத்து மாணவர்களுக்குமான பல்கலைக்கழகமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
முதலில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்பது பயங்கரவாதத்தை கற்றுக்கொடுக்கும் வித்தியாலயம் அல்ல என்பதை காவிந்த போன்றோர் தெரிந்து கொள்ளவேண்டும்.
அது பயங்கரவாதத்தை மிக கடுமையாக எதிர்க்கும் சவூதி அரேபியாவின் கொடை வள்ளல் ஒருவரின் நிதி உதவி மூலம் வசதியற்ற மாணவர்கள் அனைத்து கல்விகளையும் பெறுவதற்காக கட்டப்பட்டதாகும். அதில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுமானால் அதனை முதலில் எதிர்ப்பவர்கள் நாமாகத்தான் இருக்கும்.
ஷரீயத் என்ற அரபுச்சொல்லுக்கு வழிமுறை, சட்டம் என்பது அர்த்தமாகும். இஸ்லாமிய ஷரீயத் என்றால் இஸ்லாமிய வழிமுறை என்பதே தவிர பயங்கரவாதம் அல்ல. ஷரீயத் பற்றிய அறிவு இல்லாதவனே பயங்கரவாதியாக மாறுவான்.
மேற்படி கல்லூரியின் பெயர் இஸ்லாமிய குருமார்களுக்கான ஷரீயா டிப்ளோமா என வைக்க முயன்ற போது அதனை நாம் பகிரங்கமாக கண்டித்ததுடன் அதனை ஒரு பல்கலைக்கழகமாக ஆரம்பிக்கும்படி நாம் கேட்டுக்கொண்டோம். அதற்கிணங்க அக்கருத்து ஏற்கப்பட்டு பின்னர் அது பொதுவான தனியார் பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.
கடந்த நல்லாட்சியில் இனவாத தமிழ் அரசியல்வாதிகளினதும் அவர்கள் ஆதரவின் பின்புலத்துடனான நல்லாட்சியால் போஷிக்கப்பட்ட சிங்கள இனவாதிகளாலுமே இப்பல்கலைக்கழகம் மோசமான ஒன்றாக, பயங்கரவாதத்தை போதிக்கப்போகிறது என பொய்யாக ஊடகமயப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் மிகுந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை காண்கிறோம். ஜனாதிபதி கோட்டாபயவின் சிறந்த நடவடிக்கையின் பயனாக பாழடையும் நிலையில் இருந்த மேற்படி பல்கலைக்கழகம் கொரோனா தனியார் மயப்படுத்தலுக்கு பாவிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் தூர நோக்கு தலைவர்களில் ஒருவரான ஹிஸ்புல்லாவினால் நாட்டு மக்கள் நன்மையடைந்தனர். இதற்கான வெகுமதியை இப்பல்கலைக்கழகத்தை கட்டியவர்களுக்கு நிச்சயம் இறைவன் கொடுப்பான்.
அதேபோல் இப்பல்கலைக்கழகம் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சொல்வது போல் பொதுவான பல்கலைக்கழகமாக முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அனுமதியுடன் அமையுமாயின் அது நாட்டுக்கும் முழு கிழக்கு மாகாண மக்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.