(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஸஹ்ரான் போன்றவர்களை தண்டிப்பது மட்டுமல்ல அவர்களை உருவாக்கும் அரபு பாடசாலைகள், மதரஸாக்களையும் முழுமையாக அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் உடனடியாக இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) திங்கட்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயற்படும் நிறுவனங்ளுக்கான நிதி ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி – பிரதமரின் தலைமைத்துவம் நாட்டின் யுத்தத்தை வெற்றிகொண்டதை போலவே இன்று நாட்டின் சவால்களை வெற்றிகொள்ளவும் எதுவாக அமைந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் நினைவேந்தலைக் கோரி சுமந்திரன் வழக்கொன்றில் ஆஜரானார். ஆனால் அவர்களின் சட்ட தர்க்கங்கள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை அதிகாரத்துக்கு கொண்டுவந்த மக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை எப்போது தண்டிப்பார்கள் என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர், அதேபோல் ஸஹ்ரான் போன்றவர்களை உருவாக்க காரணமானவர்களையும், அரபுப் பாடசாலைகள், மதரஸா பாடசாலைகள் என்ற பெயரில் ஸஹ்ரான் போன்றவர்களை உருவாக்க காரணமான நபர்களையும் தண்டிக்க வேண்டும்.
பெளத்த, கிறிஸ்தவ அறநெறி பாடசாலைகளில் ஏனைய மதத்தவரை கொலை செய்ய வேண்டும் என கற்பிப்பதில்லை, இந்து அறநெறி பாடசாலைகளில் இவ்வாறு ஏனைய மதத்தவரை கொலைசெய், கழுத்தை வெட்டு என கற்பிப்பதில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் இருந்தபோதும் அதற்கும் இந்து ஆலயங்களுக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் இந்த விடயத்தில் அவ்வாறு அல்ல, மத நடவடிக்கைகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர்.
அரபு பாடசாலை என்ற பெயரிலும், மதரஸா என்ற பெயரிலும் எதனைன் கற்பிக்கின்றனர் என எவருக்கும் தெரிவதில்லை. எனவே, ஸஹ்ரான் போன்றவர்களை தண்டிப்பது மட்டுமல்ல அவர்களை உருவாக்கும் இவ்வாறான மத செயற்பாடுகளையும் முழுமையாக அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார் என்றார்.