கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வாதி தவறிவிட்டார் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இருந்து பிரதிவாதியின் அறிக்கையை அழைக்காமல் தன்னை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி பெசில் ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்து மூல கோரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் முதல் முறைப்பாடு கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழுவின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால என்ற நபரால் என அந்த எழுத்து மூல கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த முதல் முறைப்பாட்டாளரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ள பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுக்காமை விசாரணை நடவடிக்கைளில் இடம்பெற்ற பாரிய தவறாகும் என குறித்த எழுத்து மூல கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.