கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவலினால் பாதிக்கப்பட்ட நாடு முழுவதிலுமுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் அந்தந்த அமைச்சு மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கொவிட் 19 வைரசின் முதலாவது தொற்று பரவல் ஆரம்பமான 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் இதன் இரண்டாவது தொற்றுப் பரவலை எதிர்கொண்டுள்ள நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் இந்த மக்களின் நிவாரணத்திற்காக மாத்திரம் அரசாங்கத்தினால் 68.64 பில்லியன் ரூபா (68,640 மில்லியன்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதன் ஊடாக ஆகக்கூடுதலான செலவை எதிர்கொள்ளும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்காக 5,000 ரூபா நிவாரணத்தை வழங்குவதில் 2020 ஏப்ரல், மே மாதங்களில் மாத்திரம் 11,308.311 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு கொவிட் 19 இரண்டாவது அலையின் காரணமாக ஒக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 1,409,578 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக ரூபா 5,000 நிவாரணக் கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 12 ,717,889 ஆகும்.
வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையினால் 10, 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 46,411 ஆகும்.
இதே போன்று இந்த சூழ்நிலைக்கு மத்தியில் விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக விவசாய அமைச்சின் மூலம் 126 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் சுகாதார அடிப்படை வசதி மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் செலவுக்காக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செலவு 4,326 மில்லியன் ரூபா.
மேலும் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலங்கள் மூலம் இதற்கமைவாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட ஏனைய வசதிகளுக்காக 76 மில்லியன் ரூபா மாவட்ட செயலாளர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட செலவுகளுக்கு மேலதிகமாக அந்தந்த அமைச்சுகளுக்காக 2020 ஆம் ஆண்டின் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்களில் குறிப்பிடத்தக்க தொகையை இந்த கொவிட் 19 வைரஸ் பரவல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிலைமைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.