Our Feeds


Monday, November 9, 2020

www.shortnews.lk

ஊடகங்களும் பொதுமக்களும் பொறுப்பைத் துறந்தமையே தற்போதைய நிலைக்கு காரணம்: ஜனாதிபதி

 



COVID-19 தொற்று மகிழ்ச்சியளிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களும் பொதுமக்களும் அனைத்தையும் மறந்து பொறுப்பைத் துறந்தமையே தற்போதைய நிலைமைக்கான காரணமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சுகாதார ஆலோசனைகள் முறையாக பின்பற்றப்பட்டால், COVID-19 தொற்றை சுகாதார பிரிவினரால் மிக இலகுவாகக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 தொற்று சுகாதார பிரச்சினை என்பதால், மக்களை பாதுகாத்து நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினருக்கு இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் உயர்மட்ட அறிவுடன் கூடிய வைத்தியர்கள் இலங்கையில் உள்ளதுடன், அவர்களால் இந்த பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியுமென நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படக்கூடிய 03 மாற்றுத் திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது விளக்கியுள்ளார்.

முதலாவது விடயம் – ஊரடங்கை பிறப்பித்து நாட்டை முடக்கல்.

இரண்டாவது விடயம் – எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்காதிருத்தல்.

மூன்றாவது விடயம் – நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி நாட்டை வழமைக்கு கொண்டுவருதல்

என்பன ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திட்டங்களாகும்.

இதனை முன்னெடுப்பதற்கு சுகாதார ஆலோசனைகளை வைத்தியர்களிடமிருந்து பெற்று அவற்றை மக்களிடம் கொண்டு செல்வது, ஊடகங்களின் பொறுப்பும் கடமையுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.

கொரோனா தொற்று உலகில் மறையும் வரையில், நாட்டை முடக்க முடியாதெனவும் இயல்பு நிலையை கருத்திற்கொண்டு செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

COVID-19 தொற்றுக்குள்ளானோரை அடையாளங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளுக்காக அரசாங்கத்தினால் நாளொன்றுக்கு 60 மில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாளாந்தம் பாரிய தொகை நிதி செலவிடப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகவே, தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு நோய்த்தொற்றுக்கு உள்ளாகமல் இருக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கடமையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »