முஸ்லீம் கோவிட்-19 இறந்த உடல்களை தகனம் செய்வது தொடர்பாக வெளிநாட்டு (சிங்கள) மருத்துவ நிபுணரிடமிருந்து ஜனாதிபதிக்கு திறந்த கடிதம்.
தமிழில்: Dr Ziyad Aia
மேதகு ஜனாதிபதிக்கு ஒரு திறந்த கடிதம்
நவம்பர் 14, 2020
அதிமேதகு ஜனாதிபதி,
எங்கள் தாய்நாட்டின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் நீங்கள் மேற்கொண்ட பெரும் முயற்சிகளுக்கு கோவிட் -19 தொற்றுநோய் ஒரு பெரிய தடையாக மாறியிருப்பதைக் கண்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதன்படி, இன்று ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் உணர்வுபூர்வமான விஷயமாக மாறியுள்ள ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு எழுத விரும்பினேன்.
கோவிட் -19 காரணமாக இறந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டியது அவசியம். கோவிட் -19 இல் இறப்பவர்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்வது நோயை நிலத்தடிக்கு பரப்புகிறது எனும் அதிருப்தியாளர்களின் கோபத்தை சம்பாதிப்பதா? அல்லது இறப்பவர்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய மத பரிந்துரையை வேண்டிநிற்கும் முழு இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் மகிழ்விக்க ஆக்கோரிக்கைக்கு நீங்கள் சம்பாதிக்கலாமா என்ற குழப்பத்தை எதிர்கொள்கிறீர்கள்.
ஒரே நாடு, ஒரே கொடியின் கீழ், ஒரே சட்டத்தை நிறுவுவதற்கான வாக்குறுதியுடன் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். எல்லா இனத்தவர்களிடமும் நீங்கள் எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்? மற்றும் அவர்களின் மத மற்றும் கலாச்சார மரபுகளை எவ்வாறு மதிக்க முடியும்? என்ற கேள்வி இதன் பின்னால் எழுகிறது.
கோவிட் -19 என்ற விஷயத்தில் தற்போது வெளியிடப்பட்ட விஞ்ஞானபூர்வ ஆய்வு முடிவுகளை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் எடுக்கும் பாதையைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு அவ்வளவு கடினமாக இருக்காது என்பது எனது நம்பிக்கை. ஆனால் கடினமான பணி என்னவென்றால், இரண்டு எதிரெதிர் முகாம்களில் இருக்கும் இரு குழுக்களையும் பரஸ்பர மரியாதையுடன் மிதமான வரம்பிற்குள் கொண்டு செல்வது.
தற்போதைய மருத்துவ கண்டுபிடிப்புகளின்படி, கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வது ஒரு பாதுகாப்பற்ற செயல் அல்ல. மேலும் அனைத்து பாதுகாப்பு பரிந்துரைகளும் பின்பற்றப்பட்டால் குறிப்பிட்ட ஒரு குழுவினர் அதைத் தடை செய்ய வேண்டிய அவசியமில்லை.
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு காரணமான வைரஸ் ஆறு அடிக்குக் குறைவான தூரத்திற்குள் ஒருவருரிலிருந்து இன்னொருவருக்கு பரவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது, வைரஸ் நீர்த்துளிகள் (Droplets) வழியாக பரவுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் இறந்த பிறகு இவை எதுவும் நடக்காது. மேலும், கோவிட் -19 வைரஸ் உள்ள ஒருவர் மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் அதனை இன்னொருவர் அவர்களின் மூக்கு, வாய் அல்லது கண்களை அதே கையால் தொட்டால், அந்த நபர் இன்னும் நோயைக் கடத்தும் அபாயத்தில் உள்ளார். ஆனால் கோவிட் -19 பரவுவதற்கான முக்கிய வழி இதுவாகத் தெரியவில்லை. இறப்புக்கான காரணம் கோவிட் -19 என உறுதிசெய்யப்பட்டால், வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க உடலை முத்தமிடுதல், கழுவுதல் அல்லது கட்டித்தழுவுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
For more information: https://www.cdc.gov/.../daily-life.../funeral-guidance.html
கோவிட் -19 காரணமாக இறப்பவர்களை கடுமையான பரிந்துரைகளுடன் அடக்கம் செய்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதை அடக்கம் செய்வதை எதிர்ப்பவர்களில் பெரும்பாலோருக்கு நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்?
ஒரு நாடு, ஒரு சட்டத்தின் கொள்கைப்படி COVID-19 காரணமாக இறக்கும் ஒருவரை அடக்கம் செய்யும் போது தொடர்புடைய அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பை உங்கள் அரசு ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
எனது பரிந்துரைகள்: கோவிட் -19 காரணமாக இறந்த தங்கள் அன்புக்குரியவர்களை இனம், மதம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அடக்கம் செய்ய அனுமதி கோருபவர்களுக்கு பின்வரும் நிபந்தனைகளும் பரிந்துரைகளும் பின்பற்றப்பட்டால் மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். இது அடக்கம் செய்வதை எதிர்ப்பவர்களையும் சமாதானம் செய்ய உதவும்.
1. உடலை ஒரு பிளாஸ்டிக் துணியில் இறுக்கமாக மூட வேண்டும்.
2. உடலை பிளாஸ்டிக் துணியால் சுற்றப்பட்ட ஒரு பெட்டியில் வைக்க வேண்டும்.
3. சவப்பெட்டியை 6 அடிக்கு மேல் அல்லது குறைவாக இல்லாத ஆழத்தில் புதைக்க வேண்டும்.
4. புதைகுழியின் நீர் மட்டம் 8 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
5. அடக்கம் செய்யப்பட்ட இடம் நீர் கிணறுகள் மற்றும் குளங்களிலிருந்து குறைந்தபட்சம் 200 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.
6. உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், உடலை 48 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்ய வேண்டும்.
7. அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவோ அல்லது தயாரிக்கும் நேரத்திலோ உடலை முத்தமிடுவது, கழுவுவது அல்லது போர்த்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும்.
8. முழு செயல்முறையும் ஒரு பொது சுகாதார அதிகாரியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்கூறியவற்றைத் தவிர, சம்பந்தப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்க முஸ்லீம் கல்லறைகளை (மையவாடிகளை) அரசாங்கம் அடையாளம் காண வேண்டும். மேலும் தேவைப்பட்டால் கூடுதல் கல்லறைகளை (மையவாடிகளை) கண்டுபிடிக்க உதவ வேண்டும்.
மேலும், கோவிட் -19 காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்யபட்ட பரிந்துரைகளுக்கு இணங்காத, தற்போதுள்ள கல்லறைகளில் (மையவாடிகளில்) இங்கு அடக்கம் செய்ய தடை எனும் அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவுகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
தொற்றுநோயால் துரதிர்ஷ்டவசமான இனப் பிளவுகள் இருக்க கூடாது என்பது எனது விருப்பம். ஏனெனில் ஒற்றுமை இல்லாமல் அமைதி இருக்க முடியாது. மேலும், தொற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கையர்களைப் பிரிக்கக்கூடாது.
பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நீங்கள் இந்த நாட்டை வளமாக்குவீர்கள் என்று உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் எந்தவொரு கட்சியினதும், குழுவினதும் தேவையற்ற செல்வாக்கிற்கு ஆளாகாமல் இந்த பிரச்சினைக்கு தர்க்கரீதியான தீர்வை வழங்குவீர்கள் என்று அனைத்து இலங்கையர்களும் நம்புகிறார்கள்.
பிளவுபட்ட இலங்கைத் தாயை ஒன்றிணைப்பதற்கும், Pandamic ஐ கட்டுப்படுத்துவதற்கும் உங்களுக்கு வலிமை கிடைக்கட்டும்!
Dr Ganga Hemathilaka MD, MS, MS (Pharm),
FACP Chief Medical Officer at United Health Centers in the San Joaquin Valley, St. George's University Medical College, Grenada, WI Fresno, California.