Our Feeds


Saturday, November 28, 2020

www.shortnews.lk

ரயில் பெட்டி போல் மாறிய வகுப்பறைகள் - அசத்தும் பாடசாலை ஆசிரியர்கள்

 



தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா லெக்கணாப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி 236 மாணவ, மாணவிகளுடன் செயல்பட்டுவருகிறது. கடந்த பல வருடங்களாகப் பள்ளியின் உள்கட்டமைப்பை மாற்றி, மாணவர்களைக் கவர்ந்ததால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. இதனால் அடுத்தடுத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தினம்தினம் சிந்தித்து, புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர் அந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

 

கிராமத்து மாணவர்களின் ரயில் பயணம் என்ற ஆசையை நிறைவேற்ற நினைத்த தலைமை ஆசிரியர் ஆண்டனி, 'கீரனூர் - இராமேஸ்வரம்' வரை மாணவர்களை ரயிலில் அழைத்துக் கொண்டு சென்று திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனா வந்து மாணவர்களின் ஆசையில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. 


இந்த நிலையில்தான், பள்ளியின் ஓவிய ஆசிரியர் ராசேந்திரனுக்கு புதிய யோசனை தோன்ற, அந்த யோசனையை தலைமை ஆசிரியரிடம் சொல்லியிருக்கிறார். முகம் மலர்ந்த தலைமை ஆசிரியர் ஆண்டனி, யோசனையை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுத்தார்.


அந்த யோசனைதான், 3 வகுப்பறைகள் கொண்ட வகுப்பறையில், 'சென்னை - கன்னியாகுமரி' எக்ஸ்பிரஸ் ரயில் போல வண்ணம் தீட்டுவது. உடனடியாகச் செயல்படத் தொடங்கி, ரூ.15 ஆயிரம் செலவில், ஓவிய ஆசிரியர் ராசேந்திரன், தலைமை ஆசிரியர் ஆண்டனி, உதவி ஆசிரியர் ராஜ்குமார் ஆகிய மூவரும் சுமார் இரண்டரை மாதம் உழைத்துத் தீட்டிய வண்ணம், வகுப்பறைகள் ரயில் பெட்டிகளாகக் காட்சியளித்தது. ரயில் நிலையத்தில், ஒரு ரயில் நிற்பது போன்ற அந்தக் காட்சி, காண்போரை பள்ளிக்குக் கவர்ந்து இழுக்கிறது. திடீரென பார்ப்பவர்களுக்கு, பள்ளிக்குள் எப்படி ரயில் பெட்டிகள் வந்தது என்று கேட்கத் தோன்றும் வகையில் வண்ணங்கள் தீட்டப்பட்டு, ரயிலில் எழுதப்படும் வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி நம்மிடம், “எங்கள் பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்கள் அனைவருமே கிராமப்புற மாணவர்கள்தான். அவர்கள் ரயிலில் சென்றதுகூட இல்லை. அதனால் ரயிலில் ஒரு நாள் மாணவர்களுடன் செல்ல திட்டமிட்டோம். கரோனா ஊரடங்கால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அப்போதுதான் ஓவிய ஆசிரியர் ராசேந்திரன், வகுப்பறைகளை ரயில் பெட்டிகாளாக மாற்ற வண்ணம் தீட்டலாம், அப்பறம் நம் மாணவர்கள் தினமும் ரயிலில் பயணிப்பது போலவே அமையும் என்றார். அவரது கர்ப்பனையை வண்ணமாகத் தீட்ட முடிவெடுத்தோம். ரூ.15 ஆயிரம் செலவானது. இறுதியில் பள்ளி வளாகத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டோம். உதவிக்கு ராஜ்குமார் இருந்தார். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு சக ஆசிரியர்கள், ஆசிரியைகளே ஆச்சர்யப்பட்டு, புறப்படும் ரயிலில் ஏறுவது போல ஓடிச் சென்று ஏறி, அதை வீடியோக்களாகவும் பதிவு செய்துகொண்டனர். இந்த ரயில் பெட்டிகளைக் காண மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் வந்து போகிறார்கள். இனிமேல் எங்கள் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவோம்” என்றார்.


ஆசிரியர்களின் புதிய சிந்தனைகள் மாணவர்களைக் கவர்ந்து இழுக்கிறது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »