Our Feeds


Wednesday, November 4, 2020

www.shortnews.lk

மேல் மாகாண பொருளாதார மையங்கள் நாளை முதல் திறப்பு

 


 

• அந்தந்த மாவட்டங்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சிறந்த நிலையில் பேணுவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம்....


• கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தரம் உறுதிசெய்யப்பட்ட பொதிசெய்யப்பட்ட மீன்களை சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்க நடவடிக்கை.....

• மேல் மாகாண பொருளாதார மையங்கள் நாளை முதல் திறக்கப்படும்....

கொவிட்-19 தொற்று நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து சிறந்த நிலையில் பேணுவதற்கும் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்ளுக்கு அதிகாரம் வழங்கப்படும்

கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முடிந்தளவு உயர் மட்டத்தில் பேணுவதற்கும், மக்களின் வாழ்க்கையை நிலையான மட்டத்தில் பேணுவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் அலரி மாளிகையில் (2020.11.02 மற்றும் 2020.11.03) தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த திரு.பசில் ராஜபக்ஷ, உலகின் பிரதானமான நாடுகள் கொவிட்-19 தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சந்தர்ப்பத்திலும் கூட முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து, பொருளாதார இலக்குகளை நிறைவேற்றிக்கொண்டு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அந்தந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் விசேடமாக விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாக்கப்படும் வகையில் விவசாயத்துறையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கவனத்திற் கொள்ளப்பட்டது.

விவசாயத்துறைக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் சுகாதாரம், போக்குவரத்து, கடற்றொழில், தொழிற்சாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நீர் மற்றும் மின்சார விநியோகம், கழிவு முகாமைத்துவம், எரிபொருள் வழங்கல் ஆகிய அத்தியவசிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் தடையின்றி செயற்படுத்தப்பட வேண்டும் என திரு.பசில் ராஜபக்ஷ குறித்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியதுடன், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட துறைகளின் உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு சிறந்த தரத்திலான உரத்தை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

மேல் மாகாணத்தின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை முதல் சுகாதார பாதுகாப்புடன் திறக்கப்படும் எனவும் வெலிசர பொருளாதார மத்திய நிலையம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு அங்கு சேவையாற்றுவோருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகளில் உள்ள அத்தியவசிய தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையை கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மேற்கொள்ள முடியும் என்றும், அந்த அனுமதி மற்றும் முதலீட்டு சபையின் அனுமதிபெற்ற கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் அனுமதிபெற்ற தொழிற்துறைகளுக்கு முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் திறப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதிக்கான கடிதத்தை ஊரடங்கு உத்தரவு அனுமதியாக கருதி செயற்படுமாறு திரு.பசில் ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

சில பிரதேசங்களில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக தரம் உறுதிசெய்யப்பட்ட மீன்களை மக்களுக்கு விநியோகித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இம்முறை சமுர்த்தி கொடுப்பனவில் ரூபாய் 500 மதிப்புள்ள ஏற்றுமதி தரத்திலான பொதி செய்யப்பட்ட மீன்களை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டுடன் பெற்றுக்கொடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கான நிதி அமைச்சின் அனுமதியும் குறித்த கலந்துரையாடலின்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »