கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கொரானா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் சுகாதார தொழில்நுட்பக்குழுவிடத்திலேயே இறுதி முடிவு தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்ளின் ஜனாஸாக்களை நல்லடக்கும் செய்வது தொடர்பாக இன்னமும் இறுதி முடிவொன்று எடுக்கப்படவில்லை. இந்த விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைந்துள்ள விதிமுறைகளுக்கு அமைவாகவும் முஸ்லிம்களின் பண்பாட்டு ரீதியான மற்றும் இஸ்லாமிய மத முறைப்படி ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கும் இடமளிக்க வேண்டும் என்றும் நாம் தொடர்ச்சியாக ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வந்திருந்தோம்.
அதனடிப்படையில் அமைச்சரவையிலும் இந்த விடயம் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டது. அமைச்சரவையில் ஜனாஸாக்களின் நல்லடக்கம் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் காணப்படுகின்ற முன்னுதாரணங்கள் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த விடயத்தினை கையாள்வதற்காக சுகாதார தொழில்நுட்பக்குழுவொன்றும் அமைக்கப்பட்டது. அந்தக்குழுவிடத்திலும் உரிய தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் ஜனாஸாக்களை புதைப்பதன் காரணமாக தொற்றுக்கள் பரவலாம் என்று அச்சம் வெளியிடப்படுகின்றது. அத்துடன் நிலத்தடி நீர் மாசுபற்றியும் கவனம் செலுத்தப்படுகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படைக் கோரிக்கைக்கு மதிப்பளித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தீர்வொன்றை நோக்கிய சிந்தனையை சுகாதார தொழில்நுட்ப குழு மேற்கொள்ளுமாக இருந்தால் இத்தனை இழுபறிகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
துரதிர்ஷ்டவசமாக சுகாதார தொழில்நுட்பக்குழுவானது தீர்வுகளை அடையாளம் காண்பதற்கு பதிலாக ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கான காரணங்களையே மென்மேலும் அடையாளம் கண்டுகொண்டிருக்கின்றன.
தற்போது நிலத்தடி நீர் தொடர்பான கரிசனையை அந்தக்குழு வெளிப்படுத்தியுள்ளது. ஹொலண்ட் போன்ற நாடுகள் கடல் மட்டத்திலிருந்து கனிசமாக கீழேயே இருக்கின்றன. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகின்றார்கள் உள்ளிட்ட முன்மாதிரிகளை கவனத்தில் கொண்டு அக்குழு இறுதி முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்கின்றேன்.
மேலும் இந்த விடயத்தில் ஜனாதிபதியுடன் நான் பலதடவைகள் கலந்துரையாடியுள்ளேன். அவர் பக்கத்தில் எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
குறிப்பாக முஸ்லிமக்களின் கலாசார பண்பாட்டு விடயங்களுக்கு எதிரானவராக சித்தரிக்கப்படுகின்றார். அது முற்றிலும் தவறானதொரு பார்வையாகும் ஜனாதிபதியின் மீது அரசியல் காரணங்களுக்காகவே குற்றசாட்டுக்களும் பொய்யான பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டினை கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
(ஆர்.ராம்)