(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழர் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரம் வேண்டும் என கூட்டமைப்பினர் வலியுறுத்த, 70 வீத முஸ்லிம்களை கருத்தில் கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தனர்.
இந்த விடயத்தில் எல்லை நிர்ணய குழுவின் மூலமாக விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்து சர்ச்சையை கட்டுப்படுத்தினார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று கொண்டவந்த சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையில் சார்ள்ஸ் எம்.பி கூறுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் முழுமையான தனி பிரதேச சபையாக தரமுயர்த்தப்படவில்லை. இந்த பிரதேச செயலகத்தில் ஒரு நிருவாக செயலாளரும், 29 கிராம அலுவலர்கள் பிரிவுகளும், 215 அரச பணியாளர்களும் கடமையாற்றி வருகின்றனர். எனினும் நிதி அதிகாரமும், காணி அதிகாரமும் இன்றுவரை வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசாங்கமேனும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும். ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அங்கு சென்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதி கொண்டுதனர். தனி பிரதேச சபை உருவாக்கிக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசாங்கத்திடம் உள்ளது.
இந்த அரசாங்கத்தில் அங்கம் வகுக்கும் பிள்ளையான் எம்.பியும் தமிழ் மக்களிடம் வாக்குறுதி கொடுத்து இறுதியாக வாக்குகளை சித்தரிக்கும் வேலையையே செய்தார். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் நேர்மையான பதிலை முன்வைக்க வேண்டும். கட்சி சார்ந்தோ, பாகுபாடு பார்த்தோ இதனை கருதாது நேர்மையாக இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
கூட்டமைப்பின் எம்.பியான கலையரசன் தெரிவிக்கையில், கிழக்கில் சகல பிரதேச செயலகங்களும் அதிகாரத்துடன் இயங்கும் நிலையில் கல்முனை வடக்கு தமிழர் பிரதேச செயலகம் இன்றுவரை தரமுயர்தப்படவில்லை. தமிழர்கள் இங்கு பாரிய இன்னல்களை சந்திக்க நேர்ந்துள்ளது. ஏனைய சமூகம் சார்ந்த அரசியல் வாதிகளின் தலையீடுகளே இந்த பிரதேச செயலகம் தரமுயர்தப்படாதற்கு காரணமாகும். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கி ஆழ நினைக்கும் செயலாகவே நாம் இதனை காண்கிறோம். எனவே அரசாங்கம் உடனடியாக இதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் எம்.பி கூறுகையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விடயத்தில் உண்மையில் யதார்த்த பூர்வமான பரஸ்பர பிரச்சினைகள் இருப்பதை நாம் அடையாளம் காண வேண்டும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தரமுயர்த்தும் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் தலையீட்டின் காரணமாக இது தடைப்பட்டுள்ளது என்று கூறுவதை விடவும் இதில் உள்ள எல்லை பிரச்சினைக்கான சரியான தீர்வை காண்பதற்கான முயற்சியில் பல வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இரண்டு தமிழ் பேசும் சமூகங்களும் ஒற்றுமையாக இந்த பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ளோம்.
இதற்கான எல்லை நிர்ணய குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விடயத்தில் 29 கிராமசேவகர் பிரிவுகள் உள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகமும், இன்னுமொரு 29 கிராமசேவகர் பிரிவுகளை கொண்ட முஸ்லிம்களுக்கான கல்முனை செயலகத்திற்கும் இடையில் உள்ள நிலங்களை பொறுத்தவரையில் 70 சதவீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு வெறுமனே 29 கிராமசேவகர் பிரிவுகளை இருக்கின்றமையும் அதேநேரம் எல்லை பிரச்சினைகள் குறித்த சிக்கல்களையும் நாம் தீவிரமாக ஆராய்ந்து சுமூகமான முடிவை காணவேண்டும். இரண்டு தமிழ் பேசும் சமூகங்கள் இடையில் இதனை விடவும் பரந்துபட்ட உடன்பாடுகள் காணப்பட வேண்டும் என்பதுவும் கருத்தில் கொள்ள வேண்டும். கிழக்கில் பல இடங்களில் இந்த சிக்கல் நிலைமைகள் உள்ளன. எனவே வடக்கு கிழக்கில் மாத்திரம் அரசாங்கம் இந்த கொள்கைகளை கொண்டுவருகின்றதா என்பதையும் கவனிக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் இரு தமிழ் பேசும் சமூகங்களும் இந்த விடயத்தை சுமூகமாக தீர்வுக்கான முயற்சிப்போம் என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாணக்கியன் எம்.பி
தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் இந்த விடயத்தில் சில விட்டுக்கொடுப்புகளை செய்தாக வேண்டும். இந்த விடயத்திலும் முஸ்லிம் தலைமைகள் தடையாக இல்லாது விட்டுக்கொடுத்து செயற்பட வேண்டும். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்த பிரிவினை முன்னெடுக்கப்படுகின்றது. கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படுவதாக கூறியும் இன்றுவரை அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. சுயமாக ஒரு செயலகம் செயற்பட முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கத்தில் முக்கியமானவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஞானசார தேரர் ஆகியோர் இந்த பிரதேசத்திற்கு வருகை தந்ததுடன் வாக்குறுதிகளையும் கொடுத்தனர். எனினும் இன்னமும் எமது மக்கள் இந்த விடயத்தில் தீர்வு காணமுடியாது உள்ளனர். ஒரு சின்ன விடயத்தைக்கூட தீர்வுகாண முடியாது போனால் எவ்வாறு நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முடியும்.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாது ஏமாற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். கடந்த ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை ஏமாற்றினர். சுமந்திரன் மக்களை ஏமாற்றினார். இது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் நாம் இந்த விடயத்தில் தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க சகல நடவடிக்கையும் எடுப்போம். அந்த மக்களின் நியாயமாக கோரிக்கையை நாம் ஒருபோதும் நிராகரிக்க மாட்டோம் என்றார்
அமைச்சர் சமல் ராஜபக்ஷ பதில் தெரிவிக்கையில்,
எமது கொள்கை எப்போதுமே ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதாகும். இதில் சகல மக்களின் உரிமைகளையும் நாம் பாதுகாப்போம். கடந்த காலத்தில் கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்த கோரியும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இப்போதுள்ள நிகழ்கால நிலைமைகள் என்னவென்றால் உடனடியாக எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டு இந்த விடயத்தில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது, தமிழ் பிரதேச செயலகம் என பெயரிடப்பட்டுள்ளமை குறித்து முஹமட் நஸீரினால் நீதி மன்றத்தில் வடக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இந்த விடயத்தில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதனால் ஆணைகுழுவின் யோசனைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும். விரைவில் இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். சகல பிரதேச செயலகங்களுக்குமான அதிகாரங்களை நாம் பெற்றுக்கொடுப்போம் என்றார்.