(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் என்பதை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று சபையில் சூசகமாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேசம் உட்பட வலைகுடா நாடுகள் சிறந்த உறவை பேணி வருகின்றது. அந்த நாடுகள் எமக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு தருகின்றன.
எமது பொருளாதாரத்துக்கு வலைகுடா நாடுகள் ஆதரவளிக்கின்றன. அத்துடன் எமது புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை அந்த நாடுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல், அந்த நாடுகளுடன் எந்த பகையும் அரசாங்கத்துக்கு இல்லை என குறிப்பிட்டார்.
இதன்போது சபையில் இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெளிவுபடுத்தல் ஒன்றுக்காக எழுந்து வினவ முற்பட்டபோது, அமைச்சர் தினேஷ் குணவர்தன, ‘ரவூப் நாங்கள் செவ்வாய்க்கிழமைக்கு கதைப்போம். நீங்கள் அடுத்து வருவீர்கள் தானே’ என நகைச்சுவையாக தெரிவித்து, ரவூப் ஹக்கீமுக்கு கதைக்க இடமளித்தார்.
இதன்போது ரவூப் ஹக்கீம், வளைகுடா நாடுகளுடன் சிறந்த உறவை பேணிவருவதாக தெரிவிக்கின்றீர்கள். அதேபோன்று அவர்கள் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பு வழக்குவதாக குறிப்பிட்டார்கள்.
அப்படியானால் வளைகுடா நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அமைப்புகளின் செயலாளர்கள் இணைந்து, இலங்கையில் கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் மையங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.
அதனால் அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பதிலளிக்கையில், உங்களது கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும். அது தொடர்பில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. சுகாதார வைத்திய குழுவுக்கு அதுதொர்பாக கவனம் செலுத்தும் அதிகாரத்தை வழங்கி இருக்கின்றது என்றார்.