- எஸ்.பி.அக்தர் -
கொவிட - 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லீம் ஜனாஸாக்களை (உடல்களை) எரிப்பதை நிறுத்தி அடக்கம் செய்யப்பட வேண்டும். அடக்கம் செய்வதற்குரிய பொருத்தமான நிலத்தினை தருவதற்கு நிந்தவூர் பிரதேச தயாராக இருப்பதாகவும் பிரேரணை ஒன்று நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்தம அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபையின் நவம்பர் மாதக் கூட்ட அமர்வு 26ஆம் திகதி தவிசாளார் எம்.ஏ.தாஹீர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் தாஹீர் கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். சுகாதார நிபுணர் குழுவினர் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை பின்பற்றி உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் பொருத்தமான நிலத்தினை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டுமென்று தெரிவித்து சபையில் தனிநபர் பிரேரணை ஒன்றினை முன் வைத்தார்.
இதன் போது குறித்த பிரேரணையை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதோடு, மேற்படி பிரேரணையை தீர்மானமாக நிறைவேற்றினர்.
கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்ற பிரேரணை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உரையாற்றுகையில்,
கொவிட் - 19 வைரஸ் தொற்றினால்; மரணிக்கும் முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிப்பதில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டும். கடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். நல்லடக்கம் செய்வதில் இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் நிலத்தடி நீர் மாசுபடல் என்ற கருத்துக்கிணங்க நிலத்தடிக் கீழ் நீர் மாசுபடாத முறையில் நிந்தவூரில் இருக்கும் அடக்கஸ்தலங்களை பயன்படுத்த முடியும். நிந்தவூரில் உள்ள அடக்கஸ்தலங்கள் கடலை நோக்கிய நீரோட்டத்தில் அமைந்துள்ளதால்; இங்கு கொரோனாவில் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கமட செய்வதற்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என கருத்துக்கள் கூறப்பட்டன.
ஆதலால், கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் குழுவினர் எமது இந்தத் தீர்மானத்தை பரிசோதித்து, இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும்; முஸ்லீம்களின் ஜனாஸாக்களை நிந்தவூரில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதற்குரிய சரியான இடத்தினை நாம் வழங்குகிறோம்.