திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த தீர்ப்பினை நேற்று (11) திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டி தீர்பளித்தார்.
2012 ஆம் ஆண்டு சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புகையிரத நிலைய விடுதியில் வசித்து வந்த 9 வயது சிறுமி அருகில் உள்ள வீட்டுக்கு காற்றடிக்கும் பம் கொடுக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். பிள்ளை வீட்டுக்கு திரும்பி வரவில்லை என அவரது தந்தை தேடிச் சென்றுள்ளார்.
அப்போது பாழடைந்த வீட்டுக்குள் வைத்து தனது நண்பர் மூலம் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 9 வயது சிறுமியை பாலியல் குற்றம் செய்தமை தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த தீர்ப்பினை திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டினார்.
இதில் 2 குற்றச்சாட்டுகளுக்கும் ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.
இதேவேளை அரச செலவாக பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.
-திருகோணமலை நிருபர் பாருக்