8000 ஐ கடந்தது மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை..!
நேற்றைய தினத்தில் 409 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
அவர்களில், 401 பேர் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், 8 பேர் தனிமை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 332 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.
வட மாகாணத்தில் நேற்றைய தினம் மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதன வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் 334 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் புதிதாக ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர், கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்ததன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவருக்கு நேற்றைய பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தென்பகுதியைச் சேர்ந்த இருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதன வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் மொத்தமாக 101 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
இதேவேளை, சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிர்க்கதியான நிலையில், 150 பாதுகாப்பு விடுதிகளில் தங்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளது.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைய, 48 மணிநேரத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.