Our Feeds


Friday, November 20, 2020

www.shortnews.lk

கொழும்பை 2 வாரங்களுக்கு முழுமையாக முடக்கக் கோரியது ஏன்? - மேயர் ரோசி விளக்கம்

 


 

(நா.தனுஜா)

கொரோனா தொற்றாளர்களை துரிதமாக இனங்காண்பதோடு , தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தால் கொழும்மை விரைவில் வழமைக் கொண்டு வர முடியும் என்பதாலேயே கொழும்பு மாநகரத்தை இருவாரங்கள் முழுமையாக முடக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தேன் என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து  இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அதேபோன்று கொழும்பு மாநகரத்தில் சில தொடர்மாடிக் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக பலர் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கொழும்பு மாநகரத்திற்குள் தேவையுடைய 100,000 குடும்பங்களில் சுமார் 70,000 குடும்பங்களுக்கு அவசியமான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம்.

மேலும் 30,000 குடும்பங்களுக்கு அவசியமான பொருட்களை வழங்குவதற்கு இயலுமானவர்கள் உதவ முன்வரவேண்டும்.

அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கொழும்பு நகரம் இருவாரங்களுக்கு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். கொழும்பு நகரத்தின் நிலைவரம் தொடர்பில் நான் நன்கு அறிந்திருந்தமையால், அந்நகரத்தை மாத்திரம் கருத்திற்கொண்டே நான் மேற்படி வலியுறுத்தலைச் செய்தேன்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் தொற்றாளர்கள் தொடர்புகளைப் பேணியவர்களை இனங்காண்பதற்கும் அரசாங்கத்தினதும் கொழும்பு மாநகரசபையினதும் வளங்கள் பெருமளவிற்குப் பயன்படுத்தப்பட்டன.

எனவே கொழும்பு நகரத்தை முழுமையாக முடக்குவதன் ஊடாக பரிசோதனைகளை மேற்கொள்ளல், தொடர்புகளைப் பேணியவர்களை அடையாளங்காணல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றைத் திட்டமிட்டு முறையாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பு அதிகாரிகளுக்குக் கிடைக்கும்.

அதிகளவான பரிசோதனைகளை முன்னெடுத்து, வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வதன் ஊடாக கொழும்பு நகரத்தை மீண்டும் விரைவில் பழைய நிலைக்குக்கொண்டுவரவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதேவேளை இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீட்சியடைவதற்கு அரசாங்கத்திற்கு உதவும் வகையில் வெளிமாகாணங்களிலிருந்து கொழும்பிற்குள் வருபவர்கள் மற்றும் கொழும்பில் வசிப்பவர்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உயர்மட்டத்தில் பேணவேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் என்ற அடிப்படையில் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சந்திக்கின்ற அனைத்து நபர்களும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருக்கக்கூடும் என்ற எடுகோளின் அடிப்படையில், எப்போதும் எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியமாகும்.

மேலும் கொழும்பு மாநகரத்தில் சில தொடர்மாடிக்குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக பலர் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இயலுமானவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் ஆரம்பத்தில் நாடு முடக்கப்பட்டபோது கொழும்பு நகரத்திலுள்ள 50,000 குடும்பங்களுக்கு அவசியமான உலர் உணவுப்பொருட்களை எமது மாநகரசபை வழங்கியது.

இம்முறையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான அனுசரணைகளை வழங்குமாறு தனிநபர்களிடமும் நிறுவனங்களிடமும் கோரியிருக்கின்றோம்.

அதன்படி கொழும்பு மாநகரத்திற்குள் தேவையுடைய 100,000 குடும்பங்களில் சுமார் 70,000 குடும்பங்களுக்கு அவசியமான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். மேலும் 30,000 குடும்பங்களுக்கு அவசியமான பொருட்களை வழங்குவதற்கு உதவமுன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »