Our Feeds


Tuesday, November 24, 2020

www.shortnews.lk

ரிஷாதை கொல்ல கருணாவுக்கு 15 கோடி கொடுக்கப்பட்டதாக நாமல் குமார கூறியுள்ளமை தொடர்பில் விசாரனை நடத்துங்கள் - நளின் பண்டார MP

 



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கு 15 கோடி ரூபா கருணா அம்மானிடம் வழங்கப்பட்டிருந்தாக நாமல் குமார காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சஹ்ரான்  ஊடாகவே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்துள்ளது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்துள்ளது.

அதனால் இன்னும் சஹ்ரான் பற்றியே கூறிக்கொண்டிருக்காது அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதேவேளை கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் பலவற்றை வெளியிட்ட நாமல் குமார என்பவர் தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ள விடயம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்.

அதாவது, ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்காக கருணா அம்மானிடம் 15 கோடி ரூபாவுக்கு கொலைத் திட்டமொன்று ஒப்படைக்கப்பட்டிருந்ததாக நாமல் குமார அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் என்பவர் அரசாங்கத்தின் உறுப்பினர் என்பதுடன் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இருக்கின்றார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நாமல் குமார என்பவர் சஹ்ரான் தாக்குதலுக்கு முன்னர் இது போன்ற கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான குரல்பதிவுகளும் வெளியாகியிருந்தன.

அதனால் நாமல் குமாரவின்  கருத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரான்சில் வசிக்கும் துஷார பீரிஸ் என்பவர் தொடர்பாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். இதனால் அவரை இங்கு அழைத்து வந்து விசாரிக்க வேண்டும்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு வருபவர்களின் மேற்கொள்ளப்படும் விசாரணைகளும் அவர்களின்  சாட்சியங்களும் ஊடகங்களில் வெளிவருகின்றன.

ஆனால் சஹ்ரானின் மனைவியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. அதனால் அவரினால் தெரிவிக்கப்படும் சாட்சியங்கள் யாருக்கும் தெரியாது. அவர் திடீரென இறந்தால் அவர் வெளியிட்ட தகவல்கள் எதுவும் தெரியாது போய்விடும். சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவரையும் அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »