Our Feeds


Saturday, November 21, 2020

www.shortnews.lk

சாதிக்கும் முஸ்லிம் பெண் விஞ்ஞானி - 14 புது கண்டுபிடிப்புகள் - அப்துல் கலாம், மோடி, ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து விருதுகள்

 

"நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாகவே ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன. என்னைப் பொறுத்தவரை விஞ்ஞானிகள் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றல்ல. அறிவியல் அனைவருக்குமானது,"என்கிறார் மாஷா நசீம்.




கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த மாஷா நசீம் ஓர் இளம் விஞ்ஞானி; பள்ளிப்பருவத்தில் இருந்து இவர் கண்டுபிடித்த பல கருவிகளுக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

ஒன்பது வயதில் முதல் கண்டுபிடிப்பு

தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று கூறும் மாஷா, தனது முதல் கருவியை உருவாக்கும்போது அவருக்கு ஒன்பது வயது. குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் சாப்பிட சென்ற அவர், கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாயைப் பார்த்துள்ளார். அதன்மூலம் அவருக்கு உதயமான ஒரு யோசனைதான் திருடர்களைச் சிக்க வைக்கும் `பக்லர் அலாரம்`.

"என்னுடைய முதல் கண்டுபிடிப்பான பக்லர் அலாரம், எனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்விற்காக நான் வடிவமைத்தது. உணவு விடுதிக்கு சென்ற போது கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாய், ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் செயல்படுகிறது என என் தந்தை சொன்னார். அந்த சமயத்தில் திருடர்கள் குறித்த செய்திகளை நான் அதிகம் கேட்டேன். எனவே இந்த ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் நாம் ஏன் ஒரு பக்லர் அலாரம் செய்யக்கூடாது என எனக்குத் தோன்றியது," என்கிறார் மாஷா நசீம்.

"அந்த கண்டுபிடிப்பிற்காகப் பள்ளியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த சமயத்தில் நடனம், பாட்டு, விளையாட்டு போன்ற துறைகளைத்தான் மாணவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அறிவியல் துறை என்பது அந்த சமயத்தில் பலராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு துறையாக இருந்தது. எனவே அதில் முதல் பரிசு கிடைத்தவுடன் அதுவே எனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது," என தன் அறிவியல் பயணம் தொடங்கிய கதையை விளக்குகிறார் மாஷா.

பிரச்சினைகளின் தீர்வே கண்டுபிடிப்புகள்.

இதற்குப் பிறகு பல போட்டிகளில் கலந்து கொண்ட மாஷா, அடுத்தடுத்து தான் வடிவமைத்த கருவிகள் அனைத்தும் அவர் நேரில் கண்ட பிரச்னைகளின் தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்.

தனது 14ஆவது வயதில் மாவட்ட அளவு அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்குபெற,`ரயில் கழிப்பறை மாதிரி`-ஐ (ஹைடெக் ட்ரைன் டாய்லெட் பிராஜக்ட்) உருவாக்கியுள்ளார், இதன்மூலம் தண்டவாளங்களில் கழிவுகள் விழாமல் சேகரிக்கப்பட்டு சாக்கடையில் விடப்படும். இந்த கண்டுபிடிப்பால் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 46 நாடுகள் கலந்து கொண்ட, 'உலக கழிவறை கூட்டத்தில்' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பையும் பெற்றார் மாஷா.



இந்த கண்டுபிடிப்பின் காரணமாக பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் பாராட்டுக்களையும் இவர் பெற்றார். மேலும் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றுள்ளார்.

இவரின் மற்றொரு கண்டுபிடிப்பான நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியும் இவர் நேரில் பார்த்த ஒரு பிரச்னைக்கான தீர்வு குறித்து யோசிக்கும்போதுதான் உதயமாகியுள்ளது.

"எனது தந்தையின் அலுவலகத்தில் சேமிப்பு அறைக்குச் சீல் வைக்கும்போது அவருக்கு அரக்கு பட்டு தீப்புண் ஏற்பட்டதை நான் ஒரு முறை பார்த்தேன். இந்த அரக்கு முறை எனக்கு மிகவும் பழமையானதாகவும், சற்று கடினமானதாகவும் தோன்றியது; இதற்கு ஒரு நவீன முறை கண்டறியப்பட வேண்டும் என நான் யோசித்தேன்," என்கிறார் மாஷா நசீம்.

இவர் கண்டுபிடித்த இந்த நெருப்பில்லாமல் மின்சாதனம் மூலம் அரக்கு சீல் வைக்கும் முறை கன்னியாகுமரியில் நடைபெற்ற இரு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது.

"தேர்தல் ஆணையர் முன் எனது கண்டுபிடிப்பு குறித்த செயல்முறை விளக்கத்தைக் கொடுத்தேன், அவர்களும் எனது கண்டுபிடிப்பு எளிமையாக உள்ளது என்று சோதனை செய்து பார்த்தார்கள், பின் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அது கன்னியாகுமரியில் இரு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்டது,"

இவரின் இந்த கண்டுபிடிப்பிற்காக அப்துல் கலாம் கையில் தேசிய விருதும் பெற்றுள்ளார் மாஷா.

விடா முயற்சியில் கிடைத்த வெற்றி

இத்தனை பரிசுகளைப் பெற்றிருந்தாலும் தனது எந்த ஒரு கண்டுபிடிப்புகளுக்கும் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துவிடவில்லை என்கிறார் மாஷா.

"ஒரு போட்டியில் கலந்து கொண்டு எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் நான் விட்டுவிடமாட்டேன். அதில் என்ன குறை அதை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என யோசித்து முயற்சிப்பேன். நமது முயற்சியின்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும் அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும்," என்கிறார் இவர்.

தனது ஐந்து கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ள மாஷா, காப்புரிமை குறித்து தனக்கு முதன்முதலில் விளக்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்கிறார்.



"அடுத்தடுத்த கடிதங்களில் அப்துல் கலாமை சந்தித்து எனது கண்டுபிடிப்புகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினேன். எட்டு மாதங்கள் கழித்து அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவர் எனது கண்டுபிடிப்புகளுக்கு என்னை வெகுவாக பாராட்டிவிட்டு அதற்கு காப்புரிமை வாங்கிவிட்டேனா என்று கேட்டார்."

"அவர் அளித்த விளக்கத்திற்கு பிறகுதான் நான் காப்புரிமை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன். அதன்பிறகு நான் எனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்க விண்ணப்பிக்க தொடங்கினேன்," என்கிறார் மாஷா.

மாணவர்களை ஊக்குவிக்கும் இளம் விஞ்ஞானி

மாணவர்களிடத்தில் அறிவியலை ஊக்குவிக்கும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் மாஷா.



'மாஷா ஆக்கத்திறன் மையம்' என்ற ஒன்றைத் தொடங்கி பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறார் இவர்.

"நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் என்ற தேசிய அளவிலான போட்டியில் இரண்டு முறை நான் பரிசுப்பெற்றேன், அதன் நிறுவனர் இருமுறை பரிசுகள் பெற்றுள்ளாய், நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளாய், நீ ஏன் மாணவர்கள் மத்தியில் அறிவியல் குறித்து உத்வேகம் அளிக்கும் உரைகளை நிகழ்த்தக்கூடாது எனக் கேட்டார், அதன்பின் பல பள்ளி கல்லூரிகளில் கண்டுபிடிப்புகள் என்பது எவ்வளவு எளிதானது என்பது குறித்து உரை நிகழ்த்தினேன்," என்கிறார் மாஷா.

"அதன்பிறகு பல மாணவர்கள் அறிவியல் யோசனைகளுடன் என்னை தொடர்பு கொண்டனர், அவ்வாறு என்னை அணுகியவர்களுக்கு நான் உத்வேகமளித்து பணியாற்றியதில் ஒரே வருடத்தில் இரு மாணவர்கள் தேசிய அளவில் விருதுகளை பெற்றனர்," என்கிறார்.

இதுகுறித்து அப்போது கன்னியாகுமரி ஆட்சியர் நாகராஜனிடம் தெரிவித்துள்ளார் மாஷா. பின் அவர் கொடுத்த யோசனையின் பெயரில் மாஷா ஆக்கத்திறன் மையத்தை தொடங்கியுள்ளார்.

இதுவரை இந்த ஆக்கத்திறன் மையத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் ஏழு பேர் தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளனர்.

குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் திட்டங்கள் செய்வதற்கான நிதி உதவி பெறுவதற்கும் இந்த மையம் உதவி செய்து வருகிறது.

எதிர்கால திட்டங்கள்.

மேலும் இந்த ஆக்கத்திறன் மையத்தை நேஷனல் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' ஆக மாற்ற வேண்டும் என்பதுதான் தன்னுடைய லட்சியம் என்று கூறும் மாஷா, இந்த ஆக்கத்திறன் மூலம் ஆற்றிய சமூக சேவைக்காக 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மாநில இளைஞர் விருது பெற்றுள்ளார்.

2017ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி மற்றும் சமூக சேவையில் ஆற்றிய பங்கிற்காக தேசிய அளவில் இளைஞர் விருதையும் பெற்றுள்ளார்.

தனது இந்த ஆக்கத்திறன் மையத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவிக்கும் மாஷா தனது ஆக்கத்திறன் மையத்தில் 30-40சதவீதம் மாணவிகள் உள்ளதாகத் தெரிவிக்கிறார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் அறிவியல் திட்டங்களை செய்து கொள்ள தேவையான வசதிகள் கொண்ட இடமாகக் கருதப்படும் 'ஃபேப் லேப்' திட்டத்தை இலவச சேவையாக தொடங்க வேண்டும் என்பதே தனது எதிர்கால திட்டம் என்கிறார் மாஷா.

ஓர் இஸ்லாமிய பெண்ணாக முதலில் வெளியே வருவதற்கே தனக்கு தடைகள் இருந்தாக கூறும் மாஷா, தனது துறை சார்ந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதை தனது உறவினர்கள் தொடக்கத்தில் விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்.

இருப்பினும் பெற்றோர்களின் ஆதரவால் தொடர்ந்து சாதித்து வந்ததாகவும், பின் ஒரு கட்டத்தில் தனது உறவினர்களும் தனது துறையைப் புரிந்து கொண்டு ஊக்குவிக்க தொடங்கியதாகவும் கூறுகிறார்.

BBC

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »