க.பிரசன்னா
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பாடசாலைகள் அனத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் வகையிலான குருகுலம், தமிழ் மற்றும் சிங்கள மொழி ஒளிபரப்பு அட்டவணைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் குருகுலம் கல்வி ஒளிபரப்பு சேவையானது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் பாடவேளைகள் நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறவுள்ளது.
தரம் 3 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புகளுக்கான தொலைக்கல்வி ஒளிபரப்பு அட்டவணைகளே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இச்செயற்பாட்டின் மூலம் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக வாரத்தில் 7 நாட்களும் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் கல்வி கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒன்லைன் ஊடாகவும் இந்த வசதி கிடைக்கவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.