ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடந்தபோது பெரும் அமளி ஏற்பட்டது.
நேற்று அரசுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி எம் பிக்கள் எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை. இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவை வழங்கிய முஷாரப் எம் பி கூட்டத்தில் கலந்துகொண்டபோதும் அவர் கடுமையான எதிர்ப்பினையடுத்து வெளியேற்றப்பட்டார்.
ஹரீன் பெர்னாண்டோ , ராஜித உட்பட்ட பல எம் பிக்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம் எம்பிக்கள் அப்படி நடந்து கொண்டமை அவர்களின் கட்சித் தலைவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லையென்றும் இதுவரை அந்த எம்பிக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை அதனையே உணர்த்துவதாகவும் பல எம் பிக்கள் சத்தமிட்டனர்.
அரவிந்த்குமார் எம் பியை கட்சியிலிருந்து நீக்கியமைக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஒருகட்டத்தில் ஹக்கீம் , றிசாட் ஆகியோர் மீது சில எம் பிக்கள் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை செய்தபோது மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோர் அவற்றை நிராகரித்து குரல் கொடுத்தனரென அறியமுடிந்தது.
“ அரசுக்கு ஆதரவளித்தது தவறு. ஆனால் அதனை ஒரு கொலைக்குற்றம் போல சித்தரித்து அரசுடன் இணைய முடியாதென நீங்கள் கடிவாளம் போட முடியாது. நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இதனையே செய்திருப்பீர்கள்.
ஹக்கீம் , றிசாட் ஆகியோருக்கு கட்சிக்குள் இருக்கும் அழுத்தங்கள் அவர்களுக்கே தெரியும். நாங்கள் உங்களுக்கு தேவையில்லையென்றால் சொல்லுங்கள் அதற்காக தமிழ் முஸ்லிம் தலைவர்களை இளக்காரமாக கருதாதீர்கள்..” என்று மனோ கணேசனும் , திகாம்பரமும் இங்கு தெரிவித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் திகா எம் பி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ய முயன்றதாக அறியமுடிந்தது.
எவ்வாறாயினும் அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம் பிக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் அவர்களோடு ஹக்கீமையும் ,ரிசாட்டையும் சேர்த்து வெளியேற்ற வேண்டுமென இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.