அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஆகியோருக்கு இடையில் மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அரசியலமைப்பின் 20வது திருத்த சட்ட மூலம் பாராளுமன்றில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் ஜயந்த கெட்டகொட எம்.பி அமைச்சர் விமல் வீரவன்ச மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தேசிய சுதந்திர முன்னனியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
20ம் திருத்தச் சட்டத்தில் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விடயத்திற்கு விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 20ம் திருத்தச் சட்டத்திற்கு பூரண ஆதரவளிக்குமாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜயந்த கெட்டகொட கோரி வருவதாக விமல் வீரவன்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விடயத்தை கேள்விபட்ட ஜயந்த கெட்டகொட, விமல் வீரவன்சவை தாக்க முயற்சித்துள்ளதாகவும் இதனை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்ததாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.