Our Feeds


Friday, October 16, 2020

www.shortnews.lk

ராஜித, ஷம்பிக்க வரிசையில் அரசியல் பழிவாங்களில் அரசாங்கம் ரிஷாதையும் குறிவைத்துள்ளது - ராதா கிருஷ்ணன் MP

 



ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


நுவரெலியாவில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள வாக்காளர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் நோக்கில், தேர்தல் காலங்களில் புத்தளத்தில் இருந்து அவர்களை மன்னாருக்கு அழைத்து செல்வது வழமை. அந்த நடவடிக்கை சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போதும் இடம்பெற்றுள்ளது.

அப்படியிருந்தும் ரிஷாட்டை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோரை கைது செய்து அரசியல் ரீதியில் பழிவாங்கல்களை தீர்த்துக்கொண்ட அரசாங்கம், அதன் அடுத்தக்கட்டமாக ரிஷாட்டையும் இலக்கு வைத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அதேவேளை, முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டால்தான் அந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்படும். எனவே, இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும்கூட.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு நாட்டில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. மதத் தலைவர்களும், ஆளுங்கட்சி எம்.பிக்கள் கூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, நாமும் அதனை ஆதரிக்க தயாரில்லை. தற்போது 20 பற்றி கதைப்பது பயன் இல்லை. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி நாட்டை பாதுகாப்பதற்கு 20 ஐ கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் உரியவகையில் உதவித்திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை." - என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »