அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியதாவது,
“கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மன்னார் வாக்காளர்களை, தமது சொந்த இடமான மன்னாரில் வாக்களிக்க பஸ் வசதிகளை செய்து கொடுத்த விவகாரம் தொடர்பிலேயே, அவரை தற்போது கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அரச உயர்மட்டத்தின் அனுமதியைப் பெற்றே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான பஸ் வண்டி வசதிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், இடம்பெயர்ந்தோர் அமைப்பு பஸ் வண்டிக்கான கட்டணத்தை உரிய அமைச்சுக்கு செலுத்தியுமிருந்தது.
இது தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, உரிய ஆதாரங்களுடன் விடயங்களை தெளிவுபடுத்தினார். அதுமாத்திரமின்றி, இடம்பெயந்த வாக்காளர்களுக்கான இவ்வாறன வசதிகள் கடந்த இருபது வருடங்களாக இடம்பெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், வில்பத்து விவகாரம் சோடிக்கப்பட்டு பூதாகரமாக்கப்பட்டது. அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் அவர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதும், எந்தப் பிழையும் காண முடியாத நிலையில், அவரது சகோதரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, சுமார் ஐந்தரை மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். இப்போது அவரை மீண்டும் கைது செய்யுமாறு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நூறு பேர் கையெழுத்திட்டு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் நடக்காத விடயமே இதுவென கூறலாம்.
இந்நிலையில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை நீதிமன்றப் பிடியாணையைப் பெற்று, கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொரிஸாரிற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். பின்னர் அவரை கைது செய்ய, பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கையை, கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்த அதேவேளை, பிடியாணை இல்லாமல் அவரை கைது செய்ய முடியும் என பொலிஸாரிற்கு, சட்டமா அதிபர் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் பொறுமைக்காத்து அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஊடகப்பிரிவு-