முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்கு ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கேட்டறிவதற்காக சட்டமா அதிபர் தப்புலடி லிவேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல்துறைமா அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்படாமைக்கான காரணம் கேட்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ஊடாக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக பதில் காவல்துறைமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை தன்மையும் இல்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடனே பேருந்துகளில் அழைத்து சென்றதாக ரிஷாட் பதியூதீன் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியமைச்சின் அனுமதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அந்த செயற்பாடு சட்டவிரோதமானது அல்லவெனவும் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு தமது மனுவில் அவர் கோரியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்தில் இருந்து மன்னார் வரையில் இடம்பெயர்ந்த வாக்காளர்களை இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றிச் சென்றதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 3 பேர் மீது முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்காக 6 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன் அந்த குழுக்கள் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் இல்லங்களில் தேடுதல்களை மேற்கொண்டன.
எனினும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.