நிதி மோசடி விசாரணை பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) அதிகாரிகள் 2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், அச்சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் 20 பேருக்கான சுற்றுப்பயணத்திற்கான விமான பயணச்சீட்டு கட்டணம் மற்றும் சுற்றுப்பயணத்திற்கான கொடுப்பனவாக சுமார் ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பதிலளித்து உரையாற்றிய பிரதமர்,
ஊழல் மோசடி விசாரணை பிரிவொன்றை ஸ்தாபிக்கும் பேரில் அப்போதைய பிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களை கண்டறிதல் எனும் தலைப்பில் அப்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரங்களுக்கு அமைய 2015 ஜனவரி 21ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய ஊழல் தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் உறுப்பினர்கள்,
1. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (தலைவர்)
2. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர
3. முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க
4. முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ
5. முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
6. ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா
7. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
8. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
9. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
10. சட்டத்தரணி ஜே.சி. வெலிஅமுன
11. கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன
12. மலிக் சமரவிக்ரம
13. குழு செயலாளர் ஒருவர்
மேலே குறிப்பிடப்பட்ட 2015 ஜனவரி 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் தடுப்பு குழுவின் உறுப்பினர்களுக்காக பிரதமர் அலுவலகத்தினால் ஊதியமோ அல்லது கொடுப்பனவோ செலுத்தப்படவில்லை.
அத்துடன், 2015 ஜனவரி 21 அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2015 பெப்ரவரி 06 ஆம் திகதி ஊழல் தடுப்பு குழுவிற்காக செயலாளர் அலுவலகமொன்றை அமைத்தல் மற்றும் பொருத்தமான ஊழியர்களை நியமித்தல் எனும் தலைப்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய 2015 பெப்ரவரி 11 அமைச்சரவை தீர்மானத்தில் குழுச் செயலாளர் அலுவலகமொன்றை அமைப்பதற்கும், தேவையான ஊழியர்களை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, 44 பேரை கொண்ட ஊழியர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தினால் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக அதன் பணிப்பாளர் ஆனந்த விஜேபாலவிற்கு 12 இலட்சத்து 85 ஆயிரத்து 167 ரூபாயும் 33 சதம் - மூன்று வருடங்களுக்கு,
ஆலோசகர் ஏ.பி.ஏ. குணசேகரவிற்கு ரூபாய் 93 ஆயிரத்து 750 – 2 மாதங்களுக்கு,
ஆலோசகர் டி.கே. வர்ணசூர்யவிற்கு ரூபாய் 6 இலட்சத்து 60 ஆயிரம் - 2015ஆம் ஆண்டிற்காக,
ஆலோசகர், எஸ்.மெதவௌவிற்கு ரூபாய் 20 இலட்சத்து 68 ஆயிரத்து 125 - மூன்று ஆண்டுகளுக்கு,
ஆலோசகர், எம்.பி.எச்.எம். தயாரத்னவிற்கு ரூபாய் 19 இலட்சத்து 70 ஆயிரம் - மூன்று ஆண்டுகளுக்கு,
ஆலோசகர் துசித் முதலிகேவிற்கு ரூபாய் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 80 - மூன்று ஆண்டுகளுக்கு,
அத்துடன், 2015 பெப்ரவரி மாதம் முதல் 2017 ஜுன் மாதம் வரை ஊழியர்களுக்கான ஊதியம், கொடுப்பனவு மற்றும் பிற செலவுகளுக்காக சுமார் ரூபாய் 33.71 மில்லியன் நிதி பிரதமர் அலுவலகத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
´ஊழல் எதிர்ப்பு குழு´ மற்றும் ´ஊழல் தடுப்பு குழுவை ஸ்தாபித்தல்´ தொடர்பான அமைச்சரவை பத்திரம் மற்றும் தீர்மானங்களை உள்ளடக்கிய பிரதிகள் பக்க இலக்கம் 01 முதல் 24 வரையும், ஊழல் ஒழிப்பு குழுச் செயலாளர் அலுவலகத்தின் 2015 பெப்ரவரி மாதம் முதல் 2017 ஜுன் மாதம் வரையான செலவு அறிக்கை, ஒவ்வொரு அதிகாரிக்கும் செலுத்தப்பட்டுள்ள ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான சுருக்கம் மற்றும் பதவிநிலை, அதிகாரிகளுக்கு குறித்த காலப்பகுதியில் செலுத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பக்க இலக்கம் 25 முதல் 58 வரை இணைத்து இத்துடன் சமர்ப்பிக்கிறேன்.
என்னால் முன்வைக்கப்படும் இந்த ஆவணம் மற்றும் எழுத்துபூர்வமான ஆவணங்களை எனது உரையுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிதி மோசடி விசாரணை பிரிவின் (எஃப்.சி.ஐ.டி) அதிகாரிகள் 2015 முதல் 2019 வரையான விசாரணை நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிதி மோசடி விசாரணை பிரிவின் அதிகாரிகள் 20 பேரும் அவ்வப்போது 19 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கான விமான பயணச்சீட்டு கட்டணம் மற்றும் சுற்றுப்பயணத்திற்கான கொடுப்பனவாக சுமார் ரூபாய் 141 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் பதவிநிலைகள் வேறு வேறாக அவர்களை அச்செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டமைக்கான நோக்கம், பயணித்த நாடுகள், அந்நாடுகளில் இருந்த காலப்பகுதி, அவ்வாறு பயணம் மேற்கொண்ட குழு உறுப்பினர்களின் விமான பயணம், தங்குமிட வசதி மற்றும் ஏனைய வசதிகளுக்காக செலவிடப்பட்ட தொகை என்பன தொடர்பான முழுமையான விபரங்கள் பக்க இலக்கம் 59 முதல் 61 வரை இணைக்கப்பட்டுள்ளன.