ஐக்கிய தேசியக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்சவுடன் இரகசிய ஒப்பந்தமொன்று இருப்பதாக கடந்தகாலத்தில் சில தரப்பினர் குற்றஞ்சாட்டிவந்தனர்.
எனினும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாகக் கையுயர்த்தியவர்களைப் பார்க்கும்போது உண்மையில் யார் யாருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்பட்டிருக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய ஒப்பந்தமொன்று இருப்பதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டிவந்தனர். எனினும் தற்போது உண்மையில் யார் யாருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இதுகுறித்து அவதானம் செலுத்தவேண்டும்.
அதேபோன்று கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவானதும் கட்சியிலிருந்து பிரிந்துசென்ற தரப்பினர் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக செயற்படவில்லை. ஏனெனில் 19 ஆவது திருத்தத்தின்படி ஒருவர் புதிதாக ஜனாதிபதியாகத் தெரிவானாலும் கூட, முன்னைய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும். எனினும் அதனைச் செய்ய முடியாத நிலையையும் இந்தத் தரப்பினரே உருவாக்கினார்கள்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து பிரிந்து சென்றவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் அவதானத்துடன் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்றார்.
நா.தனுஜா