Our Feeds


Saturday, October 10, 2020

www.shortnews.lk

களுவாஞ்சிக்குடி காட்டுக்குள் தங்கம் தேடும் பொலிசார்

 


 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தங்கத்தினை தேடும் பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.


நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை கைதுசெய்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் குறித்த பகுதியில் தங்கம் உட்பட பல பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றின் அனுமதிபெறப்பட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம்,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறியின் மேற்பார்வையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் குணவாத்தனவின் தலைமையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் இந்த தேடுதல் பணிக்கான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தனர்.

காலை முதல் முன்னெடுக்கப்பட்ட தங்கம் தேடும் பணிகளின் போது எவையும் மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »