முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரியவராகவே இருந்து வருகின்றார்.
அவர் 2005 தொடக்கம் 2019 வரைக்கும் அமைச்சராக இருந்த காலங்களில் அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்காக கைதுசெய்ய முற்படாமல், கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மக்களை அரச பேரூந்துகளில் வன்னிக்கு அழைத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தே அவர் தேடப்பட்டு வருகின்றார்.
இதற்காக பேரூந்துக் கட்டனம் செலுத்தியதாக ரிசாத் அவர்கள் கூறிய அதேவேளை, நிதி அமைச்சு மூலமாக பணம் செலுத்தியதாக முன்னாள் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ரிசாத் வதியுதீனின் தம்பி ரியாஜ் பதியுதீன் அவர்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பலமாதங்கள் தடுத்து வைக்கப்பட்டதன்பின்பு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த விடுதலையானது தென்னிலங்கையில் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
ரிசாத் வதியுதீனுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்திற்கு அமைவாகவே தம்பி ரியாஜ் விடுதலை செய்யப்பட்டார் என்ற விமர்சனத்திற்கு ஜனாதிபதியே நேரடியாக மறுப்பு தெரிவிக்கும் நிலைக்கு அது பூதாகரமாக அமைந்தது.
ரியாஜ் பதியுதீனின் விடுதலையானது குமரன் பத்மநாதனின் விடுதலையை போன்றதாகும். விடுதலை புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் அவர்கள் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டு சில காலங்களின் பின்பு விடுதலை செய்யப்பட்டிருந்தார். அது பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும். அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
தம்பி ரியாஜ் பதியுதீன் அவர்கள் குற்றப் புலனாய்வு துறையினால் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி விடுவித்திருக்க முடியாது. ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன அவர்கள் ஜனாதிபதியின் விருப்பமின்றி இந்த விடுதலைக்கு அங்கீகாரம் வழங்கியிருக்க வாய்ப்பில்லை.
இறுதி யுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் ரிசாத் பதியுதீன் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது இன்றைய பாதுகா[ப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன அவர்கள் அன்று வடமாகான கட்டளை தளபதியாக இருந்தார். அதனால் இருவரும் ஒன்றிணைந்தே மீள்குடியேற்ற செயல்திட்டங்களை கையாண்டார்கள்.
மேலும், தம்பி ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டதன் பின்பு வவுனியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ரிசாத் பதியுதீனும், பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவும் ஒன்றாக கலந்துகொண்டதுடன், அங்கு உரையாற்றும்போது ரிசாத் பதியுதீனை புகழ்ந்து கமால் குணரத்ன அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார்.
ரிசாத் பதியுதீனை போலிஸ் குழுக்கள் தேடுகின்றதென்பது வெறும் அரசியல் நாடகம் என்று சந்தேகப்படுவதற்குரிய வலுவான காரணி இதுவாகும்.
குற்றமற்றவர் என்று தம்பி ரியாஜ் பதியுதீனை விடுதலை செய்ததன் பின்பு அதனை விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக மீண்டும் அவரை கைதுசெய்ய முடியாது.
இருந்தாலும் தென்னிலங்கை இனவாதிகளை திருப்திப்படுத்தும் தேவை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே முன்னாள் அமைச்சர் ரிசாத் வதியுதீனை கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரிசாத் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்காக நீண்டகாலங்கள் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியாது. ஆனாலும் ஒரு நாள்கூட தன்னால் தடுப்புக்காவலில் இருக்க முடியாதென்றே ரிசாத் பதியுதீன் தலைமறைவாகியுள்ளார்.
இந்த நிலையிலேயே “கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது” போல ரிசாத் பதியுதீனின் வாகனத்துக்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும், அது அரசுக்கு சொந்தமானதல்ல என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மேலும் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.
எனவே “மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது” போல நாங்கள் பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பதனை தவிர்ப்பது சிறந்தது. ரிசாத் வதியுதீன் குற்றவாளி என்றால், ஆட்சியாளர்கள் குற்றமற்றவர்களா ? அல்லது அவுலியாக்களா ?
முஸ்லிம்களுக்கெதிரான இனவாத பிரச்சாரத்தின் மூலம் ஆட்சி அமைத்த அரசாங்கம் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்கின்ற எந்தவொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஆதரவளிக்க முடியாது.
அத்துடன் விரும்பியோ விரும்பாமலோ முஸ்லிம் மக்களின் ஆதரவைபெற்ற பிரதிநிதியான ரிசாத் பதியுதீனை இந்த நேரத்தில் விமர்சிப்பதானது ஆட்சியாளர்களின் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாகவே அமைகின்றது.
முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது
நன்றி: மீள்பார்வை