தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாயலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளியின் ஆவணங்களை உடனடியாக கையளிக்குமாறு தம்புள்ளை மாநகர ஆணையாளர் தம்புள்ளை பள்ளி நிர்வாகத்தை கடிதம் மூலம் கோரியுள்ளார்.
இதனையடுத்து பள்ளி நிர்வாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. இவ்விவகாரம் வக்பு சபையின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் தொடர்பில் மாத்தளை மேயர் ஜாலிய ஓபாத கருத்து வெளியிடுகையில் “தம்புள்ளை புனித பூமி எல்லையில் அமைந்துள்ள பள்ளிவாயல் தொடர்பில் விரைவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும், இத்தீர்மானம் பள்ளி நிர்வாகம், அப்பகுதி பன்சலைக்கு பொறுப்பான மதகுரு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் என்போருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளப்படும்.
ஏற்க்கனவே தம்புள்ளை பள்ளிவாயலுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாற்றுக் காணி தம்புள்ளை வர்த்தக மையத்தை அண்மித்துள்ளதால் மக்கள் வாழும் பிரதேசமொன்று இனங்காணப்படும்” என்றார்.
தம்புள்ளை பள்ளிவாயல் 2012ம் ஆண்டு ஏப்ரல் 20ம் திகதி அப்பகுதி ரங்கிரி ரஜமஹா விகாரையை சேர்ந்த பௌத்த குருவின் தலைமையிலான குழுவினரால் தாக்கப்பட்டது. பள்ளிவாயல் தம்புள்ளை புனித பூமியில் அமைந்துள்ளதினால் அப்பள்ளிவாயலை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்டும் என அக்குழுவினர் ஆர்பாட்டம் செய்தனர்.
கடந்த 08 ஆண்டுகளாக பள்ளியை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது சாத்தியப்பட வில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இப்பள்ளியை மாற்றிடத்தில் நிர்மானிப்பதற்கு அமைச்சர் ஷம்பிக்க ரணவக்கவினால் 20 பேர்ச் காணி ஒதுக்கட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
என்றாலும் தம்புள்ளை பிரதேசத்திற்கு பொறுப்பான அரசியல்வாதிகள் சிலர் அக்காணி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.