Our Feeds


Wednesday, October 7, 2020

www.shortnews.lk

மினுவங்கொட கொரோனா பரவலுக்கான மூலம் இதுவரை கண்டறியப்பட வில்லை

 



மினுவாங்கொடை -  ஆடை தொழிற்சாலையை மையப்படுத்திய கொரோனா கொத்தணி பரவல் காரணமாக, 72 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளது. 


அதன்படி இன்று இரவு 10  மணி வரையிலான நேரத்துக்குள் மட்டும்  இந்த கொத்தணி பரவல் காரணமாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.


 இந் நிலையில், மினுவாங்கொடை  ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய 495 பேர் நாடளாவிய ரீதியில் பல  பிரதேசங்களில் வசிப்பதும் அவர்கள் அப்பகுதிகளுக்கு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ள நிலையில், அவர்களையும் அவர்கள்து தொடர்பாடல் வலயத்துக்கு உட்பட்டோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள்  தொடர்ந்தன. இதற்காக உளவுப் பிரிவினருடன் இணைந்து பொலிசாரும் சுகாதார  அதிகாரிகளும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.


 இந் நிலையில் ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவலின் ஆபத்து தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில்,  இன்று  மாலை முதல் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கும் ஊரடங்கை அமுல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.


 ஏற்கனவே 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்,  தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலையானது மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுகளில் அமுல் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இன்று முதல் அப்பட்டியலில் கம்பஹா பொலிஸ் பிரிவும் இணைக்கப்பட்டது.


 இந் நிலையில் இந்த கொத்தணி தொடர்பில்  விஷேடமாக விளக்கத்தினை அளித்த,  கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர், இராணுவ தளபதியும் முப்படைகளின் அலுவலக பிரதானியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா,


'  இந்த ஆடை தொழிற்சாலையில் 1400 வரையிலான  ஊழியர்கள் சேவையாற்றுகின்றனர்.  அத்துடன் அந் நிறுவனத்துடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் மேலும் 400 பேர் வரை சேவையில் உள்ளனர். 


இந் நிலையில் இவர்களில் மொத்தமாக 495 பேர்  இலங்கையின் பல பாகங்களை சேர்ந்தவர்கள். ஏனைய அனைவரும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள்.


 இந் நிலையில் மேற்குறித்த இரு வகையான ஊழியர் பிரிவுகளை சேர்ந்த 495 பேரும் இலங்கையில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளதால் அது குறித்து அவதானம் செலுத்தி அவர்களையும் அவர்களது அண்மைய தொடர்பாடல் கட்டமைப்புக்குள் வருவோரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளே இடம்பெற்று வருகின்றன' என தெரிவித்தார்.


இந் நிலையிலேயே, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தற்போது இலங்கையின் எந்த பகுதியில் வசித்தாலும், அவர்களை வசிக்கும் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டாம் என  லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  கோரியுள்ளார்.  அத்துடன் , வீடுகளிலிருந்து வெளியேறுவதைத் தவிர்க்குமாறும் குறித்த ஊழியர்களின் குடும்பத்தினரிடமும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.


மினுவாங்கொடை   ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு பாரிய அளவில் நோய் அறிகுறிகள் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 


இந் நிலையிலேயே  கொரோனா தொற்று தொடர்பிலான ஆபத்து அதிகரித்துள்ளது. சமூகத்தின் மத்தியில் அறிகுறிகள் எதுவும் இன்றியும் கொரோனா தொற்றாளர்கள் உலா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில்,  உரிய சுகாதார வழி முறைகளை பின்பற்றுமாறு பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, தொற்றுக்குள்ளான அநேகமானவர்களிடம் நோய் அறிகுறி தென்படாமை தாம் எதிர்கொண்ட முக்கிய சவால் என ஆடை த் தொழிற்சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமது ஊழியர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் முக்கியத்துவம் அளிப்பதுடன், தற்போதைய நிலையில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது.


 இந் நிலையில் மினுவாங்கொடை  ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி பரவல் கண்டறியப்பட்டு 72 மணி நேரம் நிறைவடைந்தும் இதுவரை குறித்த பரவலுக்கான மூலம் தொடர்பில் மர்மம் நீடிக்கின்றது. 


இந் நிலையில் பரவலின் மூலத்தை கண்டறிய சுகாதார தரப்பினரும் பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை நடாத்தி வருவதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.


 இந் நிலையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மேற்பார்வையாளரான திவுலப்பிட்டியவில் வசித்த  நான்கு பிள்ளைகளின் தாய்க்கு கொரோனா தொற்றிருப்பது முதலில் உறுதி செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவரது 16 வயது மகளுக்கும் அத்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதியாகியிருந்தது.


 இந் நிலையில் க.பொ.த. சாதாரண தரத்தில், கம்பஹா மாவட்டத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி கல்விகற்றமை தெரியவந்ததுடன், இறுதியாக கடந்த வெள்ளியன்று பாடசாலைக்குச் சென்றிருந்தமையும் உறுதி செய்யப்பட்டது.


 இந் நிலையில் அப்பாடசாலை மாணவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட  அறிவுறுத்தப்பட்ட நிலையில், குறித்த மாணவியின் வகுப்பு மாணவர்கள் மற்றும் நெருங்கிப் பழகிய மாணவர்கள் 43 பேர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் 58 பேர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 


அதன்படி அந்த 101 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது அந்த பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 101 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இவ்வாறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.


 இவ்வாறான பின்னணியில் இன்று இரவு 10 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 832  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்ப்ட்டுள்ளனர். அதன்படி  இதுவரை இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 ( எம்.எப்.எம்.பஸீர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »